படப்பிடிப்பில் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் கலந்துகொள்ளத் தடையில்லை: மும்பை நீதிமன்றம் உத்தரவு

படப்பிடிப்பில் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் கலந்துகொள்ளத் தடையில்லை: மும்பை நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதால் ஒருசில மாநிலங்களில் சினிமா படப்படிப்புகளை உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்க அந்தந்த மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளன.

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. இதனால் கடும் நிபந்தனைகளுடன் அம்மாநில அரசு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதியளித்திருந்தது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. அதில் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைப்பிடிப்பது, படப்பிடிப்பில் குறைவானவர்களே கலந்துகொள்வது, 65 வயதான நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் படப்பிடிப்புக்கு வரக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் மகாராஷ்டிர அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்த நடிகர் ப்ரமோத் பாண்டே கடந்த ஜூலை 21 அன்று மும்பை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த வழக்கு நேற்று (ஆகஸ்ட் 7) விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், ''மற்ற தொழில்கள் செய்ய எல்லா வயதினரும் அனுமதிக்கப்பட்டுள்ளபோது, நடிப்பதற்கு மட்டும் வயதானவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது சரியல்ல'' என்று கூறினர். இந்த விஷயத்தில் அரசின் முடிவு பாரபட்சமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களுக்கு படப்பிடிப்பில் கலந்துகொள்ள விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மும்பை நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இந்திய திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் (IMPPA) வரவேற்பு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in