வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரை

வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் - தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரை
Updated on
1 min read

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதுமே பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழி தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

ஓடிடி தளத்தில் படங்கள் வெளியிடப்படுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள், மல்டிப்ளக்ஸ் நிறுவனங்கள் என எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால், படங்கள் வெளியீட்டைத் தடுக்க முடியவில்லை.

திரையரங்கு உரிமையாளர்களின் எதிர்ப்பையும் மீறி ‘தில் பெச்சாரா’ படம் நேற்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழிலும் ‘பொன்மகள் வந்தாள்’, ‘பெண்குயின்’ உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் நேரடியாக ஓடிடியில் வெளியாகின. இன்னும் பல்வேறு பெரிய படங்களும் ஓடிடியில் வெளியாக தயாராகியுள்ளன. இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

இதை இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை சார்பாக நடந்த உள்ளரங்கு கூட்டத்தில் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை செயலர் அமித் கரே உறுதி செய்துள்ளார்.

ஆகஸ்ட் 1லிருந்து ஆகஸ்ட் 31க்கும் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளை திறக்க அனுமதிக்கலாம் என்று தான் பரிந்துரைத்துள்ளதாக அவர் அக்கூட்டத்தில் கூறியுள்ளார். அதோடு ஒவ்வொரு சீட் வரிசைக்கும் இடையில் ஒரு வரிசை காலியாக விடப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு சீட்டுக்கும் இடையே 2 மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட திரையரங்க அதிபர்கள் அமித் கரே கூறிய நிபந்தனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், 25 சதவீத பார்வையாளர்களோடு படங்களை திரையிடுவது திரையரங்கு மூடப்பட்டிருப்பதை விட மோசமானது என்று அவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in