திருமணங்களில் கங்கணா நடனமாடுவதில்லை: நக்மாவின் பதிவுக்கு கங்கணாவின் சமூக வலைதளக் குழு பதில்

திருமணங்களில் கங்கணா நடனமாடுவதில்லை: நக்மாவின் பதிவுக்கு கங்கணாவின் சமூக வலைதளக் குழு பதில்
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணத்துக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெரிதாக வெடித்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ச்சியாக முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு கங்கணா ரணாவத் அளித்த பேட்டியில் மகேஷ் பட், கரண் ஜோஹர் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்கள் மீது குற்றம் சாட்டினார். மேலும், டாப்ஸி மற்றும் ஸ்வாரா பாஸ்கர் ஆகியோரையும் சாடினார். இதற்கு டாப்ஸி உள்ளிட்டோர் தங்களது ட்விட்டர் பதிவுகளில் கங்கணாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை நக்மா தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு நடிகர்களுடன் கங்கணாவின் சினிமா பயணம் குறித்த மீம் ஒன்றைப் பகிர்ந்து அதில் கங்கணாவின் வாரிசு அரசியல் என்று குறிப்பிட்டிருந்தார்.

நக்மா வெளியிட்ட மீம்
நக்மா வெளியிட்ட மீம்

நக்மாவின் இந்தப் பதிவுக்குப் பதிலளிக்கும் விதமாக கங்கணாவின் சமூக வலைதளக் குழுவினர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

1) பன்சோலி கங்கணாவின் காதலர் அல்ல. இதை கங்கணாவே பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறார். முதலில் பன்சோலி கங்கணாவின் குரு போல தோன்றினாலும் நாளடைவில அவர் ஒரு கொடூரனாக மாறிப் போனார். ஒவ்வொரு முறை கங்கணா ஆடிஷனுக்குச் சென்றுவந்த பிறகும் அவர் கங்கணாவை அடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அனுராக் பாசுவிடம் கங்கணாவை அவர் அறிமுகப்படுத்தவில்லை.

2) கங்கணா ‘கேங்ஸ்டர்’ படத்தில் ஆடிஷன் மூலம் தேர்வு செய்யப்பட்டார். இதில் எந்த வாரிசு அரசியலும் இல்லை.

3) ‘கைட்ஸ்’ படத்தில் ஒரு சாதாரண கதாபாத்திரம் வழங்கியதால் கங்கணாவின் சினிமா வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதுதான் காரணம். ‘க்ரிஷ் 3’ படத்தில் அவராக நடிக்கவில்லை, வற்புறுத்தி நடிக்கவைக்கப்பட்டார்.

4) எந்த ஏஜென்ஸியும் அவரை வேலைக்கு எடுக்க முன்வரவில்லை. ஏனெனில் பொதுமக்கள் பணத்தை வீசியெறியும் திருமணங்களில் அவர் நடனமாடவோ முகப்பூச்சு விளம்பரங்களில் நடிக்கவோ செய்யமாட்டார். அதனால் அவரது கால்ஷீட்களை அவரது சகோதரி ரங்கோலி முடிவு செய்கிறார். மேலும் அவருக்கு ஆங்கிலம் தெரியாததால் எந்தச் சகோதரியும் செய்யும் உதவியைத்தான் ரங்கோலி செய்து கொண்டிருக்கிறார். எனவே பொய்களைப் பரப்புவதை நிறுத்தவும்.

இவ்வாறு அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in