

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்துகொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
ஷேகர் கபூர் இயக்கத்தில் சுஷாந்த் நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட படம் ‘பாணி’. இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரித்துள்ளார். இப்படத்துக்காக சஞ்சய் லீலா பன்ஸாலியின், ‘பாஜிராவ் மஸ்தானி’, ‘பத்மாவதி’ உள்ளிட்ட வாய்ப்புகளை சுஷாந்த் இழந்தார் என்று கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் ‘பாணி’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று சுஷாந்த் ரசிகர்கள் பலரும் ஷேகர் கபூரின் சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து கேள்வியெழுப்பி வந்தனர்.
இதற்கு ஷேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.
தன்னுடைய பதிவில் அவர் கூறியுள்ளதாவது:
''கடவுள்களுடனோ அல்லது உங்கள் படைப்புகளுடனோ நீங்கள் பயணம் செய்ய விரும்பினால் நீங்கள் ஒவ்வொரு அடியையும் பக்தியுடன் மிகவும் பணிவாக எடுத்துவைக்க வேண்டும். ‘பாணி’ திரைப்படம் உருவாக ஒருநாள் கடவுள் உதவி செய்வார். அப்படி நடந்தால் அதை நான் சுஷாந்துக்கு அர்ப்பணிப்பேன். ஆனால் அப்படம் பணிவோடு நடப்பவர்களுடன் சேர்ந்து உருவாக்கப்படும். அகந்தை கொண்டவர்களுடன் அல்ல''.
இவ்வாறு ஷேகர் கபூர் கூறியுள்ளார்.
தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவுடன் ஷேகர் கபூருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ‘பாணி’ திரைப்படம் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.