தற்கொலையா கொலையா - சுஷாந்தைப் போலவே இருக்கும் டிக்டாக் நட்சத்திரத்தை வைத்து புதிய திரைப்படம்

தற்கொலையா கொலையா - சுஷாந்தைப் போலவே இருக்கும் டிக்டாக் நட்சத்திரத்தை வைத்து புதிய திரைப்படம்
Updated on
1 min read

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் சாயலில் இருக்கும் டிக்டாக் நட்சத்திரம் ஒருவரை வைத்து புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. 'Suicide or Murder' (தற்கொலையா கொலையா) என்று இந்த படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 14-ம் தேதி இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் விவாதிக்கப்பட்டு வந்தாலும், மன அழுத்தத்தால் அவர் இதைச் செய்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.

தொடர்ந்து, சுஷாந்தின் வாழ்க்கையை சில திரைப்படமாக்க முயற்சி செய்வதாகத் தகவல்கள் வெளியாகின. தற்போது, புதிதாக ஆரம்பமாகவுள்ள விஎஸ்ஜி பின்ஜ் (VSG Binge) என்ற ஓடிடி தளத்துக்காக ஒரு திரைப்படம் உருவாகிறது. இதன் அறிவிப்பு அந்த தளத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

"சிறிய ஊரிலிருந்து வந்த ஒரு இளைஞன் திரைத்துறையில் பெரிய நட்சத்திரமாகிறான். இது அவனது பயணம். வெளியிலிருந்து துறைக்குள் நுழைபவராக நடிக்கும் சச்சின் திவாரியை அறிமுகம் செய்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டு ஒரு போஸ்டர் பகிரப்பட்டுள்ளது. சுஷாந்த் போன்ற சாயலில் இருக்கும் சச்சின் திவாரி என்ற டிக்டாக் பிரபலம் இந்தப் படத்தின் நாயகனாக நடிக்கிறார்.

'Suicide or Murder' என்று பெயரிடப்பட்டுள்ளதால் சுஷாந்தின் மரணத்தைப் பற்றியே இந்தப் படம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in