

சோனம் கபூர், கல்கி கோச்லின், தியா மிர்சா உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் சமூக வலைதளங்களில் பெண்களுக்கு விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ வாரிசு நடிகர்களின் சமூக வலைதளப் பக்கங்களுக்கே சென்று திட்டி தீர்த்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி சுஷாந்த் குறித்து கூறியதாக வெளியான ஒரு போலிச் செய்தியை வைத்து அவரது சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் அவரை சாடினர். அவர் மீது ஆசிட் வீசுவதாக மிரட்டல் விடுத்த இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் (17.07.20) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிரபலங்களுக்கு விடுக்கப்படும் ஆசிட் வீச்சு, கொலை மிரட்டல்களுக்கு எதிராக பாலிவுட் பிரபலங்கள் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளனர். நடிகை சோனம் கபூர், கல்கி கோச்லின், தியா மிர்சா, இயக்குநன் ஹன்ஸல் மேத்தா, அஹானா கும்ரா, சாயானி குப்தா ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கங்களில் இதற்கான கையெழுத்து மனுவை பகிர்ந்துள்ளனர். அதில் இதுவரை 5,000க்கும் அதிகமானோர் கையெழுத்திட்டுள்ளனர்.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
இன்று கதாசிரியர்கள், ஸ்டாண்ட்-அப் காமெடியன்கள், நடிகர்கள் மற்றும் தங்கள் கருத்தை உறுதியாக முன்வைக்கும் அனைத்து பெண்களும், ஆபாசமான மீம்கள், பாலியல் ரீதியான பின்னூட்டங்கள், கார்ட்டூன் படங்களால் தொடர்ந்து குறிவைக்கப்படுகின்றனர். சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்களுக்கு கொலை மற்றும் பாலியல் பலாத்காரம் குறித்த மிரட்டல்கள் அன்றாடம் நடக்கும் விஷயங்களாகி விட்டன.
தற்போது ப்ளாக் அல்லது ரிப்போர்ட் செய்வதன் மூலம் மட்டுமே இவற்றை ஒதுக்க முடியும். ஆனால் இதன் மூலம் எந்த பயனும் இல்லை. இந்த குற்றவாளிகள் தொடர்ந்து வெறுப்பை கக்கவே செய்வார்கள். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்கள் பின் தொடரும் அந்த சமூகவலைதள பக்கங்கள் ஆணாதிக்கத்தையும், ஹோமோஃபோபியாவையும் இயல்பான ஒன்றாக சித்தரிக்கின்றன.
இவற்றுக்கு எதிராக சரியான நடவடிக்கை தேவை. பெண்களுக்கு எதிரான ஆன்லைன் வன்முறையை நாம் முடிவுக்கு கொண்டு வரவேண்டும். பாலின பேதமின்றி நாம் அனைவரும் சமூக வலைதளங்களில் இயங்கும் பெண்களுக்கு பாதுகாப்பை வலியுறுத்த கடமைப்பட்டுள்ளோம்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.