

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்துத் தான் பேசிய விஷயங்களை நிரூபிக்க முடியவில்லையென்றால், பத்மஸ்ரீ விருதைத் திருப்பிக் கொடுத்துவிடுவேன் என நடிகை கங்கணா ரணாவத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தேசிய அளவில் அவரைத் தெரிந்த அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. பல்வேறு பாலிவுட் நடிகர்கள் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னால் இருக்கும் பாலிவுட் அரசியலைப் பற்றி வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர்.
அங்கிருக்கும் வாரிசு அரசியல், வாரிசுகளுக்கு எளிதாகத் திறக்கப்படும் கதவுகள், சுஷாந்த் போல வெளியிலிருந்து வந்தவர்கள் புறக்கணிக்கப்படுவது உள்ளிட்ட பல விஷயங்கள் கடந்த ஒரு மாதமாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.
இதில் நடிகை கங்கணா ரணாவத் எழுப்பிய குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் சுஷாந்தின் தற்கொலைக்கு மறைமுகக் காரணம் என்று கங்கணா அதிரடியாகப் பேச இது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஒரு பேட்டியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளார் கங்கணா.
"மும்பை காவல்துறை என்னிடம் பேசியது. நான் மணலியில் இருப்பதால் யாரையாவது அனுப்பி எனது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு சொன்னேன். இதுவரை யாரும் என்னிடம் அதுபற்றிப் பேசவில்லை. பொதுவில் நிரூபிக்க முடியாத ஒரு விஷயத்தை நான் பேசியிருந்தேன் என்றால் நான் எனது பத்மஸ்ரீ விருதைத் திரும்பக் கொடுத்து விடுகிறேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏனென்றால் அப்படி நடந்தால் நான் அதற்குத் தகுதியானவள் அல்ல. மேலும் அப்படி (வேண்டுமென்றே அவதூறாக) பேசும் ஆள் நான் கிடையாது. நான் பேசிய அனைத்துமே பொதுமக்கள் முன்னிலையில்தான் உள்ளன.
நாளையே வாய்ப்புகளைத் தேடும் டாப்ஸி, ஸ்வரா பாஸ்கர் போன்ற வெளியாட்கள், தங்களுக்கு இந்தத் துறை பிடிக்கும் என்பார்கள். உங்களுக்கு இந்தத் துறை பிடிக்குமென்றால், கரண் ஜோஹரைப் பிடிக்கும் என்றால் ஏன் ஆலியா, அனன்யாவைப் போல உங்களுக்கு வாய்ப்புகள் வருவதில்லை? அவர்கள் துறையில் இருப்பதே வாரிசு அரசியலுக்கான அத்தாட்சி.
இந்தப் பேட்டிக்குப் பிறகு எனக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று சொல்லும் கட்டுரைகள் வரும். அதுவும் எனக்குத் தெரியும்" என்று கங்கணா பேசியுள்ளார்.
மேலும் இந்தப் பேட்டியில், ஆதித்யா சோப்ரா, மகேஷ் பட், கரண் ஜோஹர், (விமர்சகர்) ராஜீவ் மஸந்த் ஆகியோரை ஏன் மும்பை காவல்துறை விசாரிக்கவில்லை என்றும், இவர்களே சுஷாந்தின் எதிர்காலத்தைப் பாழாக்கியவர்கள் என்றும் கங்கணா சாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.