ரன்பீர் கபூரைப் போலவே இருக்கும் ஜுனைத் ஷா மரணம்

ரன்பீர் கபூரைப் போலவே இருக்கும் ஜுனைத் ஷா மரணம்

Published on

உருவத்தில் நடிகர் ரன்பீர் கபூரைப் போலவே இருந்ததால் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜுனைத் ஷா காலமானார். அவருக்கு வயது 28.

2014-ம் ஆண்டு, காஷ்மீரைச் சேர்ந்த ஜுனைத் கான், பார்க்க அப்படியே ரன்பீர் கபூர் சாயலிலேயே இருந்ததால் அவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டது. ஏன், ரன்பீர் கபூரின் தந்தையும், பாலிவுட்டின் மூத்த நடிகருமான மறைந்த ரிஷி கபூர் கூட, ஜூனைத் ஷா பற்றி ட்வீட் செய்து, "ஆண்டவா என் மகனைப் போலவே ஒருவர். நிச்சயமாக (வித்தியாசம்) கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நல்ல இரட்டை"என்று குறிப்பிட்டிருந்தார்.

ஸ்ரீநகரின் எல்லாஹி பாக் பகுதியில் வசித்து வந்த ஜுனைத், வெள்ளிக்கிழமை இரவு அன்று கடுமையான மாரடைப்பின் காரணமாக மரணமடைந்தார். இது குறித்து பதிவு செய்துள்ள பத்திரிகையாளர் யூசுஃப் ஜமீல், "எங்கள் வயதான பக்கத்து வீட்டுக் காரர் நிஸார் அஹமத் ஷாவின் மகன் ஜுனை ஷா, இரவு, கடுமையான மாரடைப்பின் காரணமாகக் காலமானார்.

அவர் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரைப் போலவே இருப்பதாக மக்கள் சொன்னார்கள். உடல்நிலை சரியில்லாத ஜுனைத்தின் அம்மா, அப்பா மற்றும் ஒட்டுமொத்த காஷ்மீருக்கும், அவர் பெரிய நம்பிக்கை, பலம் மற்றும் பாதுகாவல் என்று நான் சொல்வேன்" என்று ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஜுனைத் மும்பையில் நடிகர் அனுபெம் கேரின் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் பயிற்சி பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அவருக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் வந்திருக்கின்றன. கடந்த மாதம் ஜூனைத் தனது பெற்றோருடன் காஷ்மீர் திரும்பியுள்ளார். இதற்கு முன் ஜுனைத்துக்கு இதயப் பிரச்சினைகள் எதுவும் இருந்ததில்லை.

ஜுனைத்தின் மரணத்துக்கு சமூக வலைதளங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in