வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக கருத்து: இயக்குநர் பால்கிக்கு ஷேகர் கபூர், அபூர்வா அஸ்ரானி கடும் கண்டனம்

வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக கருத்து: இயக்குநர் பால்கிக்கு ஷேகர் கபூர், அபூர்வா அஸ்ரானி கடும் கண்டனம்
Updated on
1 min read

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம் பாலிவுட் உலகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

வாரிசு நடிகர்களாலும், வாரிசு நடிகர்களை ஊக்குவிக்கும் இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுத்த மன உளைச்சலாலும்தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனிடையே, வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக பாலிவுட்டின் முன்னணி இயக்குநரான பால்கி அளித்துள்ள பேட்டி சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அப்பேட்டியில் ஆலியா பட், ரன்பீர் கபூரை விடச் சிறந்த நடிகர்களைக் காட்டுங்கள் என்று பால்கி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் பால்கியின் கருத்துக்கு நடிகர் ஷேகர் கபூர், எடிட்டர் அபூர்வா அஸ்ரானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஷேகர் கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''உங்கள் மீது எனக்கு பெரும் மதிப்பு இருக்கிறது பால்கி. ஆனால் தற்போது ‘கை போ சே’ படம் பார்த்தேன். அந்த சமயத்தில் அறிமுகமான மூன்று அற்புதமான நடிகர்கள் நடித்திருந்தனர். ஒவ்வொருவரும் அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியுள்ளனர்'' என்று கூறியுள்ளார்.

2013 ஆம் ஆண்டு வெளியான ‘கை போ சே’ படத்தில்தான் சுஷாந்த் சிங் அறிமுகமானார்.

எடிட்டர் அபூர்வா அஸ்ரானி தனது ட்விட்டரில் கூறுகையில், ''மனோஜ் பாஜ்பாயீ, ராஜ்குமார் ராவ், ஆயுஷ்மான், கங்கணா, ப்ரியங்கா சோப்ரா, டாப்ஸி, வித்யா பாலன். பிரபலமான பாலிவுட் குடும்பங்களைத் தாண்டி பார்த்தால் இத்தனை பேர் இருக்கின்றனர். எனக்கும் ஆலியா மற்றும் ரன்பீரைப் பிடிக்கும். ஆனால், அவர்கள் மட்டுமே சிறந்த நடிகர்கள் அல்ல.

பங்கஜ் திரிபாதி, ஜெய்தீப், நவாசுதீன், ஸ்வேதா திரிபாதி, அடக் கடவுளே... நம்மிடம் இருக்கும் திறமையான நடிகர்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதே 3, 4 பெயர்களை திரும்பத் திரும்பச் சொல்வதை நிறுத்துங்கள்'' என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in