அமிதாப், அபிஷேக்கைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, மகள் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி

அமிதாப், அபிஷேக்கைத் தொடர்ந்து ஐஸ்வர்யா, மகள் ஆராத்யா இருவரும் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனை தொடர்ந்து ஐஸ்வர்யா, ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சனுக்கு ஜூலை 11 அன்று கரோனா தொற்று உறுதியானது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரைத் தொடர்ந்து மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அமிதாப் பச்சன் - அபிஷேக் பச்சன் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராய் - ஆராத்யா இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டனர்.

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குக் கரோனா தொற்று உறுதியானவுடன், அரசியல் கட்சிப் பிரபலங்கள், முன்னணி நடிகர்கள், தொழில்துறை பிரபலங்கள் எனப் பலரும் அமிதாப் பச்சன் குடும்பத்தினர் பூரண நலம்பெற வாழ்த்து தெரிவித்தார்கள்.

அமிதாப், அபிஷேக் இருவரின் உடல்நிலை நன்றாகத் தேறி வருவதாகவும், சிகிச்சைக்கு உடல் நன்றாக ஒத்துழைக்கிறது என்றும் இருவரும் குறைந்தது இன்னும் 7 நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்கள் என்றும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஐஸ்வர்யா ராய், ஆராத்யா இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பரிசோதனையில் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in