

இசையமைப்பதற்கு எந்த விதிமுறைகளும் தேவையில்லை, அது இதயம் சம்பந்தப்பட்டது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் கடைசியாக நடித்த 'தில் பெச்சாரா' திரைப்படம் ஜூலை 24-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகவுள்ள இந்தப் படத்தினை, சினிமாவின் மீது சுஷாந்துக்கு இருந்த காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஹாட் ஸ்டாருக்கு சந்தா கட்டாதவர்களும் இலவசமாகப் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்புப் பாடல் வீடியோ இன்று (ஜூலை 10) வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் பாடலை பாடியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒட்டுமொத்த பாடல்களையும் படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் பாடல்கள் அனைத்துக்குமே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
'தில் பெச்சாரா' படத்தின் பாடல்கள் குறித்து ஏ.ஆ.ரஹ்மான் கூறியிருப்பதாவது:
"இந்த படத்தில் முகேஷ் சாப்ராவுடன் இணைந்தது மிகப்பெரிய அனுபவம். அவரது உற்சாகம் பிறருக்கும் தொற்றிக் கொள்ளக்கூடியது. இப்படம் மிகவும் கவனத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. ஏனெனில் பல இதயங்கள் நிறைந்த இப்படத்தில் தற்போது சுஷாந்த்தின் நினைவுகளும் உள்ளன.
இந்த காதல் பாடலுக்காக பாடலாசிரியர் அமிதாப் பட்டாச்சார்யாவுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. பாடல்கள் இந்தியாவின் சிறந்த இசை கலைஞர்கள் மற்றும் பாடகர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆல்பம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.
இசையமைப்பதற்கு எந்த விதிமுறைகளும் தேவையில்லை, அது இதயம் சம்பந்தப்பட்டது. நான் பாடல்களை உருவாக்கும்போது அவைகளை சிறிது நேரம் சுவாசிக்க வைத்து விட்டு பிறகு இயக்குநரிடம் காண்பிப்பேன்"
இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்
முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள 'தில் பெச்சாரா' படத்தில் சுஷாந்த், சஞ்சனா சங்கி பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தக் கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.