

சுஷாந்த் சிங் மீது அன்பு மழை பொழிகிறது என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
சுஷாந்த் சிங் நடிப்பில் உருவான கடைசிப் படம் 'தில் பெச்சாரா'. முகேஷ் சாப்ரா இயக்கியுள்ள இந்தப் படத்தின் நாயகியாக சஞ்சனா சங்கி நடித்துள்ளார். இந்தப் படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இதே கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக வெளிவந்துள்ளது நினைவுகூரத்தக்கது.
'தில் பெச்சாரா' பட வெளியீடு, கரோனா அச்சுறுத்தலால் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் இப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிடப்படவுள்ளது. மேலும், சுஷாந்த் சிங்கை நினைவுகூரும் வண்ணம் இந்தப் படத்தை அனைவருமே இலவசமாகக் காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 6-ம் தேதி 'தில் பெச்சாரா' ட்ரெய்லர் இணையத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இந்த ட்ரெய்லரைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். இதனால் ட்ரெய்லர் வெளியான சில மணித்துளிகளில் 10 லட்சம் பார்வைகளைக் கடந்தது. தற்போது வரை 4 கோடியே 40 லட்சம் பார்வைகளைக் கடந்து, 78 லட்சம் லைக்குகளைப் பெற்று சாதனை புரிந்துள்ளது.
உலக அளவில் பலராலும் விரும்பப்பட்ட ட்ரெய்லர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து சாதனை புரிந்தது.
இது தொடர்பாக 'தில் பெச்சாரா' படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பதிவில் "சுஷாந்த் மற்றும் 'தில் பெச்சாரா' படத்தின் மீதான அன்பு மழை பொழிகிறது" என்று தெரிவித்துள்ளார்.