

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள், பாலிவுட் பிரபலங்கள் பலரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ‘ராம்லீலா’, ‘பத்மாவதி’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சஞ்சய் லீலா பன்ஸாலியிடமும் மும்பை போலீஸார் விசாரணை நடத்தினர்.
3 மணி நேரங்களுக்கும் மேலாக நடந்த விசாரணையில் போலீஸாரின் ஏராளமான கேள்விகளுக்கு பன்ஸாலி பதிலளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில் பன்ஸாலி தான் இயக்கிய ‘ராம்லீலா’, ‘பாஜிராவ் மஸ்தானி’ ஆகிய படங்களுக்காக முதலில் சுஷாந்தை அணுகியதாகவும், ஆனால் தேதி ஒத்துவராததால் அந்த இரண்டு படங்களின் வாய்ப்பும் ரன்வீருக்குச் சென்றதாகவும் கூறியுள்ளார்.
மேலும் ‘பத்மாவதி’ படத்தில் ஷாஹித் கபூர் நடித்த ரத்தன் சிங் கதாபாத்திரத்துக்கும் முதலில் சுஷாந்தையே அணுகியதாகவும் பன்ஸாலி கூறியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு சுஷாந்த் உடனான ஒப்பந்த நகல்களை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் மும்பை போலீஸாரிடம் ஒப்படைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.