வாரிசு நடிகர்களைத் தொடர்ந்து டாப்ஸியைச் சாடும் கங்கணா ரணாவத்

வாரிசு நடிகர்களைத் தொடர்ந்து டாப்ஸியைச் சாடும் கங்கணா ரணாவத்
Updated on
1 min read

கங்கணா ரணாவத்தின் முயற்சிகளுக்குப் பலனை அனுபவித்துள்ள நடிகை டாப்ஸி, கங்கணாவுக்கு எதிரான அணியில் சேர்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் வாரிசு அரசியல், செல்வாக்கு அரசியல் குறித்து நீண்ட காலமாகவே கடுமையாகச் சாடிப் பேசி வருகிறார் நடிகை கங்கணா ரணாவத். சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து இன்னும் தீவிரமாக வாரிசு அரசியல் குற்றச்சாட்டுகளை கங்கணா தனது சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக முன்வைத்து வருகிறார்.

ஆனால் தற்போது நடிகை டாப்ஸியைக் கங்கணா தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. "வெளியிலிருந்து வரும் பல நடிகர்கள் கங்கணாவின் முன்னெடுப்புகளைத் தொடர்ந்து கெடுக்க முயல்கின்றனர். திரைத்துறை மாஃபியாவிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்று பார்க்கின்றனர். கங்கணாவைத் தாக்கிப் பேசினால் அவர்களுக்கு வாய்ப்புகளும், விருதுகளும் கிடைக்கின்றன. ஒரு பெண்ணை வெளிப்படையாக அவமானப்படுத்துவதில் அவர்கள் பங்கேற்கின்றனர். உங்களை நினைத்து வெட்கப்படுகிறோம் டாப்ஸி.

கங்கணாவின் முயற்சிகளுக்கான பலன்களை அனுபவித்து இப்போது அவருக்கு எதிரான அணியில் சேர்ந்துள்ளீர்கள்" என்று கங்கணாவின் சமூக வலைதளக் குழு பக்கம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டி ட்வீட் பகிர்ந்துள்ளது.

இதற்கு டாப்ஸி நேரடியாக பதில் கூறவில்லையென்றாலும், மறைமுகமாக சில ஊக்க மொழிகளைப் பகிர்ந்துள்ளார். 'கசப்பான மனிதர்கள் உங்களை அவர்களின் நிலைக்கு இறக்க விடாதீர்கள். அவர்களைப் போல நடந்துகொள்ளக் கூடாது என்று முடிவெடுங்கள். அவர்களைப் போல் இல்லையென்று மகிழ்ச்சியுடன் இருங்கள்' என்றும், 'நீங்கள் சிறப்பாக இருந்தால் மட்டுமே, கசப்பாக இருந்தால் அல்ல' என்று ஆரம்பிக்கும் ஒரு மேற்கோளையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் கசப்பானவர்கள் எந்த நேர்மறை விஷயத்திலும் எதிர்மறையானவற்றைப் பார்ப்பார்கள் என்ற பதிவையும் பகிர்ந்துள்ளார். இவற்றோடு சேர்த்து, இந்த விஷயங்களைத்தான் கடந்த சில மாதங்களாக குறிப்பாகப் பின்பற்றி வருவதாகவும், இது தனக்கு அமைதியைத் தந்ததாகவும் டாப்ஸி குறிப்பிட்டுள்ளார்.

கங்கணா தரப்பு டாப்ஸியைக் குறிவைப்பது இது முதல் முறையல்ல. சில மாதங்களுக்கு முன், கங்கணாவின் மலிவான பிரதிதான் டாப்ஸி என்று கங்கணாவின் சகோதரி ரங்கோலி குற்றம் சாட்டியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in