சுஷாந்த் தற்கொலை; கங்கணாவிடம் விசாரணையா?- சமூக வலைதளக் குழு மறுப்பு

சுஷாந்த் தற்கொலை; கங்கணாவிடம் விசாரணையா?- சமூக வலைதளக் குழு மறுப்பு
Updated on
1 min read

சுஷாந்த் தற்கொலை தொடர்பாக கங்கணா ரணாவத்திடமும் மும்பை போலீஸார் விசாரணை நடத்தியதாக தகவல் பரவியது. கங்கணா தரப்பில் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக சுஷாந்தின் நண்பர்கள், ஊழியர்கள் பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கங்கணா ரணாவத்திடமும் மும்பை போலீஸார் விசாரணை நடத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பரவி வந்தது. சில ஊடகங்களிலும் இது தொடர்பாக செய்திகள் வெளியாகின.

கங்கணா தரப்பில் இந்தச் செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் கங்கணாவின் சமூக வலைதளக் குழுவினர் வெளியிட்டுள்ள மறுப்புச் செய்தியில், ''மும்பை போலீஸாரிடமிருந்து எந்தவொரு அழைப்பும் இதுவரை கங்கணாவுக்கு வரவில்லை. அப்படி வந்தாலும், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க அவர் தயாராக இருக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.

சுஷாந்த் தற்கொலை செய்துகொண்ட பிறகு பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் பற்றி கங்கணா பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பானது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in