திரையரங்க வெளியீட்டுக்கு தயாரான ‘சூர்யவன்ஷி’ மற்றும் ‘83’ - ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

திரையரங்க வெளியீட்டுக்கு தயாரான ‘சூர்யவன்ஷி’ மற்றும் ‘83’ - ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

Published on

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுவதும் பொதுமக்கள் கூடும் இடங்கள் அனைத்துமே கடந்த 3 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இதில் திரையரங்குகளும் அடங்கும். எப்போது மீண்டும் திறக்கப்படும் என்பது இதுவரை உறுதியாகவில்லை. இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட அனைத்து மொழித் தயாரிப்பாளர்களுமே கடும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளனர்.

இதனால் பல்வேறு தயாரிப்பாளர்கள் தங்களின் படங்களை ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்து வருகின்றனர். ஜூலை மாதத்தில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் 7 இந்திப் படங்கள் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் அக்‌ஷய்குமார் நடிப்பில் ‘சூர்யவன்ஷி’ மற்றும் ரன்வீர் சிங் நடிப்பில் ‘83’ ஆகிய இரு படங்களும் திரையரங்கில் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிவிஆர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ரோஹித் ஷெட்டியின் ‘சூர்யவன்ஷி’ இந்த ஆண்டு தீபாவளிக்கும், கபீர்கானின் ‘83’ இந்த ஆண்டு க்றிஸ்துமஸ் பண்டிகைக்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜய் தேவ்கன் நடித்த ‘சிங்கம்’ திரைப்பட வரிசையில் ஒன்றான ‘சூர்யவன்ஷி’ படத்தில் அக்‌ஷய்குமார், கத்ரீனா கைஃப், ஜாக்கி ஷ்ரோஃப் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ரிலையன்ஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

1983ஆம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வென்றது. இதனை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள ‘83’ படத்தை கபீர் கான் இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, ஜீவா, பங்கஜ் திரிபாதி ஆகியோர் நடித்துள்ளனர்.

அக்‌ஷய்குமார் நடித்த மற்றொரு திரைப்படமான ‘லக்‌ஷ்மி பாம்’ வரும் ஜூலை 24ஆம் தேதி நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in