ஊரடங்கால் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேனா? - ‘தபாங் 3’ நடிகர் விளக்கம்

ஊரடங்கால் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டேனா? - ‘தபாங் 3’ நடிகர் விளக்கம்
Updated on
1 min read

அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றிலுமான பாதிக்கப்பட்டுள்ளது. தினக்கூலி பணியாளர்கள் முதல் நடுத்தர மக்கள் வரை போதிய வருமானமின்றி சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் வேலைகளில் இருப்பவர்கள் கூட வேறு தொழிலை தேடிச் செல்லும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘தபாங் 3’ படத்தில் நடித்த ஜாவேத் ஹைதர் பாடல் ஒன்றை பாடிக் கொண்டே காய்கறிகள் விற்பது போன்ற ஒரு வீடியோ ட்விட்டர் வெளியானது. சில மணி நேரங்களிலேயே அந்த வீடியோ பலராலும் பகிரப்பட்டு வைரலானது. ஊரடங்கு காரணமாக காய்கறி விற்கும் நிலைக்கு ஜாவேத் அக்தர் தள்ளப்பட்டதாக ஊடங்களிலும் செய்தி வெளியானது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தான் காய்கறி விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக வெளியான செய்திக்கு ஜாவேத் ஹைதர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஒரு பேட்டியில் ஜாவேத் கூறியுள்ளதாவது:

நான் காய்கறிகளை விற்கவில்லை. நான் தொழில்ரீதியாக ஒரு நடிகன். ஊரடங்கு காரணமாக தற்போது எதுவும் செய்யாமல் இருக்கிறேன். ஒரு நடிகராக என்னை பிஸியாக வைத்துக் கொள்ள ஒரு செயலிக்காக இசை வீடியோக்கள் உருவாக்கி வருகிறேன். அந்த செயலியை என் மகள் பயன்படுத்தி வருவதால் அவர் என்னிடம் சில வீடியோக்களை உருவாக்குமாறு கூறினார். எல்லாரும் மன அழுத்தத்தில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போதைய சூழலில் வேலை இல்லாததால் பலரும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர். எனவே அதற்காக ஒரு வீடியோவை உருவாக்க நினைத்தேன்.

வேலையில்லாமல் கஷ்டப்படும் பல நடிகர்களை நான் அறிவேன். எனவே ஆரம்பகட்டமாக சில நல்ல கருத்துக்களுடன் கூடிய சில வீடியோக்களை பதிவேற்றலாம் என்று நினைத்தேப். எனவே ஒரு நாள் காய்கறி வியாபாரி ஒருவரின் அனுமதியும் அவரது காய்கறி வண்டியை பயன்படுத்தி ஒரு வீடியோ எடுத்தேன்.

திடீரென அந்த வீடியோ வைரலாகி 10 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை கொடுத்தாலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது எனக்குள் இருக்கும் நடிகனுக்கு சோகத்தையே அளித்தது. எனவே எந்த வேலையும் தகுதியில் குறைந்தது இல்லை என்பதை வலியுறுத்த தொடர்ந்து வீடியோக்களை உருவாக்கி வந்தேன். கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு எந்த பணப் பிரச்சினையும் இல்லை, ஒருவேளை எதிர்காலத்தில் அப்படி ஒரு நிலை வந்தால் கூட காய்கறி விற்பதை அவமானமாக கருதமாட்டேன்.

இவ்வாறு ஜாவேத் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in