சுஷாந்த்துக்கு அஞ்சலியாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவு: நடிகை பூமி பெட்னேகர் முடிவு

சுஷாந்த்துக்கு அஞ்சலியாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவு: நடிகை பூமி பெட்னேகர் முடிவு
Updated on
1 min read

மறைந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு அஞ்சலின் செலுத்தும் விதமாக, 550 வறிய குடும்பங்களுக்கு உணவு வழங்க நடிகை பூமி பெட்னேகர் உறுதியெடுத்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி நடிகர் சுஷாந்த் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். பாலிவுட்டில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணம், துறையில் சுஷாந்தின் நண்பர்கள் மற்றும் அவருடன் பணியாற்றியவர்களை இன்னும் கனமாக பாதித்தது. சுஷாந்த் மறைந்த தினத்திலிருந்தே அவரைப் போற்றும் விதமாக, அஞ்சலி செலுத்தும் விதமாக பல்வேறு விஷயங்களை அவரது திரையுலக நண்பர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சுஷாந்துடன் 'சோன்ச்சரியா' திரைப்படத்தில் நடித்தவர் நடிகை பூமி பெட்னேகர். தற்போது இந்த முன்னெடுப்புக்காக ஏக் ஸாத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பூமி, "எனது அன்பு நண்பரின் நினைவாக, ஏக் ஸாத் அமைப்பு மூலமாக வறுமையில் வாடும் 550 குடும்பங்களுக்கு உணவளிக்க உறுதியெடுக்கிறேன். எப்போதையும் விட, இப்போது அதிக தேவை இருப்பவர்களின் பால் நாம் அன்பும், இரக்கமும் காட்டுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஜூன் 16 அன்று, 'கை போ சே' திரைப்படம் மூலமாக சுஷாந்தை பாலிவுட்டில் நடிகராக அறிமுகம் செய்த இயக்குநர் அபிஷேக் கபூரும் அவரது மனைவி ப்ரக்யா கபூரும், சுஷாந்தின் நினைவாக 3400 குடும்பங்களுக்கு உணவளிக்க உறுதியெடுத்தது நினைவுகூரத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in