

நடிகனாக 28 ஆண்டுகள் நிறைவானதையொட்டி, ஷாரூக் கான் தனது ட்விட்டர் பதிவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர் ஷாரூக் கான். இவரை பாலிவுட் பாட்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர். இவருக்கு உலகளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
1992-ம் ஆண்டு 'தீவானா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கடந்த ஜூன் 26-ம் தேதி இவர் திரையுலகில் அறிமுகமாகி 28 ஆண்டுகள் ஆகிறது. இதனால், ஷாரூக் கானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். #28YearsOfShahRukhKhan என்ற ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்ட்டானது.
பலருடைய வாழ்த்து மற்றும் ரசிகர்களின் ட்ரெண்ட் ஆகியவை குறித்து ஷாரூக் கான் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"எப்போது என்னுடைய கனவு ஒரு தேவையாகவும், பின்னர் என்னுடைய தொழிலாகவும் மாறியது என்று தெரியவில்லை. இத்தனை ஆண்டுக்காலம் என்னை மகிழ்விக்க அனுமதித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடைய தொழிலை விட என்னுடைய கனவு இன்னும் பல ஆண்டுகளுக்கு உங்களை என் மூலம் உங்களை மகிழ்விக்கும் என்று நான் நம்புகிறேன்"
இவ்வாறு ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.