இந்தியாவில் பணம் சம்பாதித்து ஆயுதங்கள் வாங்கும் சீனா: கங்கணா ரணாவத் சாடல்

இந்தியாவில் பணம் சம்பாதித்து ஆயுதங்கள் வாங்கும் சீனா: கங்கணா ரணாவத் சாடல்
Updated on
1 min read

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியப் படைகள் மீது சீன ராணுவத்தினர் நடத்தியிருக்கும் தாக்குதலைக் கண்டித்திருக்கும் நடிகை கங்கணா ரணாவத், அனைத்து சீன பொருட்களையும் நிராகரிப்பதன் மூலம் நமது அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படி கோரியுள்ளார்.

சமூகத்தில் நடக்கும் பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து தனது கருத்துகளை முன்வைத்து வருபவர் நடிகை கங்கணா ரணாவத். அவ்வப்போது இவர் கருத்துக்கு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. சமீப காலமாக, சமூக வலைதளங்களில் நேரடியாக இயங்காமல், அதற்காக நியமித்திருக்கும் ஒரு குழுவின் மூலம் தனது கருத்துகளைப் பகிர்ந்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள காணொலியில் கங்கணா ரணாவத் இந்திய ராணுவத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். கடந்த திங்கள் இரவு கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினரின் தாக்குதலால் மரணமடைந்த 20 இந்திய ராணுவ வீரர்கள் குறித்துப் பேசியுள்ள கங்கணா, "யாராவது உங்களது விரல்களை, உங்கள் கைகளைத் துண்டிக்க வேண்டும் என்று முயற்சித்தால் என்ன ஆகும். அப்படியான வலியைத்தான் சீனா நமக்குத் தருகிறது.

இந்த வீரர்கள் போட்டுக்கொண்டிருக்கும் சண்டை அவர்களுடையது, அரசாங்கத்தினுடையது என்று நினைப்பது சரியா? நமக்கு அதில் பங்கில்லையா? லடாக் நமது நாட்டின் வெறும் நிலப்பகுதி அல்ல. அது மதிப்பு வாய்ந்த உடைமையும் கூட.

நாம் அனைத்து சீன பொருட்களையும், அவர்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களையும் புறக்கணிக்க வேண்டும். நம் நாட்டில் கிடைக்கும் சம்பாத்தியத்தை வைத்து அவர்களின் ராணுவத்துக்கு ஆயுதங்கள் வாங்குவார்கள். நமது அரசாங்கத்தை, வீரர்களை ஆதரிப்பது நம் கடமை இல்லையா. நாம் சுயசார்புடன் இருக்க வேண்டும்" என்று பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in