Published : 27 Jun 2020 03:56 PM
Last Updated : 27 Jun 2020 03:56 PM

அவரது இழப்பு நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடம்; அறக்கட்டளை தொடக்கம்: சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அறிக்கை

அவரது இழப்பு நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடம் என்றும், அவருடைய பெயரில் அறக்கட்டளை தொடக்கப்பட்டுள்ளதாகவும் சுஷாந்த் சிங் குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவருமே இரங்கல் தெரிவித்தார்கள். சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு பாலிவுட்டில் வாரிசு அரசியல் சர்ச்சை பெருமளவில் பேசப்பட்டு வருகிறது.

இதனிடையே, சுஷாந்த் சிங் மறைவுக்குப் பிறகு அவருடைய குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர் கூறியிருப்பதாவது:

"உலகத்தால் சுஷாந்த் சிங் ராஜ்புத் என்று அழைக்கப்படும் அவர் எங்களைப் பொறுத்தவரை குல்ஷன்.

அவர் மிகவும் சுதந்திரமான, உற்சாகமான, மிகவும் பிரகாசமானவராக இருந்தார். எல்லா விஷயங்களிலும் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார். எந்த அளவீடுகளும் இல்லாத கனவுகளைக் கொண்டிருந்தார். உறுதியான இதயத்தோடு அந்த கனவுகளை அடையவும் செய்தார். எப்போதும் அதிகமான புன்னகையையே அளிப்பார். எங்கள் குடும்பத்தின் பெருமை மற்றும் உத்வேகமாக இருந்தார். அவருடைய டெல்ஸ்கோப் தான் அவருக்கு எல்லாமே. அதன் மூலம் நட்சத்திரங்களை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருப்பார்.

அவருடைய சிரிப்பை இனி கேட்கவே முடியாது என்பதை எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவருடைய மின்னும் கண்களை இனி நாங்கள் பார்க்கப்போவதில்லை. அறிவியல் குறித்த அவரது தொடர் விவாதங்களை இனிமேல் நாங்கள் கேட்கப்போவதில்லை. அவருடைய இழப்பு எங்கள் குடும்பத்தில் மீண்டும் நிரப்பவே முடியாத ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது.

அவருடைய ரசிகர்கள் ஒவ்வொருவரையும் அவர் மிகவும் நேசித்தார். எங்கள் குல்ஷன் மீது அதீத அன்பைப் பொழியும் உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்.

அவருடைய நினைவுகளையும், ஆளுமையையும் போற்றும் விதமாக அவருக்கு மிகவும் பிடித்த துறைகளான சினிமா, அறிவியல், விளையாட்டு ஆகியவற்றில் திறமையான இளைஞர்களை ஊக்குவிக்க சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை என்ற ஒன்றை தொடங்க குடும்பத்தினர் தீர்மானித்துள்ளோம்.

பாட்னா, ராஜீவ் நகரில் உள்ள அவரது பால்யகால இல்லம் அவரது நினைவகமாக மாற்றப்படும். அவரது ஆயிரக்கணக்கான புத்தகங்கள், அவரது டெலஸ்கோப், ஃப்ளைட் சிமுலேட்டர் உள்ளிட்ட ஏராளமான தனிப்பட்ட நினைவுப் பொருட்களையும் அவருடைய உடைமைகளையும் அவரது ரசிகர்களுக்காக அங்கு வைக்கப்படும். இன்று முதல் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை நாங்கள் நிர்வகிக்க உள்ளோம். அவரது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் அவரது ஆளுமையின் நினைவுகளை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும்.

உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் எண்ணங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்"

இவ்வாறு சுஷாந்த் சிங் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x