ஜூலை 24-ம் தேதி வெளியாகும் சுஷாந்தின் கடைசிப் படம்: இயக்குநர் உருக்கமான பகிர்வு

ஜூலை 24-ம் தேதி வெளியாகும் சுஷாந்தின் கடைசிப் படம்: இயக்குநர் உருக்கமான பகிர்வு
Updated on
1 min read

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கடைசிப் படமாகக் கருதப்படும் 'தில் பெச்சாரா', டிஜிட்டலில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் இயக்குநர் முகேஷ் சாப்ரா, சுஷாந்த் பற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கடந்த ஜூன் 14-ம் தேதி, இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டார். அவரது மறைவு பாலிவுட்டில் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மே 8-ம் தேதி வெளியாகவிருந்த அவரது 'தில் பெச்சாரா' படம் பற்றிய உரையாடல்களும் ஒரு பக்கம் நடந்தன.

ஊரடங்கால் இந்தத் திரைப்படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் இந்தப் படம் ஜூலை 24 அன்று நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, சினிமாவின் மீது சுஷாந்துக்கு இருந்த காதலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஹாட் ஸ்டாருக்கு சந்தா கட்டாதவர்களும் அவர் கடைசியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படத்தை இலவசமாகப் பார்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்தத் திரைப்படத்தின் இயக்குநர் முகேஷ் சாப்ரா, சுஷாந்துடன் இருந்த நாட்களை நினைவுகூர்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"சுஷாந்த் நான் இயக்கிய முதல் படத்தின் நாயகன் மட்டுமல்ல. எனது கஷ்டத்தில் என்னுடனே இருந்த எனது அன்பார்ந்த நண்பன். 'கை போ சே' படத்தில் ஆரம்பித்து 'தில் பெச்சாரா' வரை நாங்கள் நெருங்கிய நண்பர்களாக இருந்திருக்கிறோம். எனது முதல் படத்தில் நடிப்பேன் என்று சுஷாந்த் எனக்கு உறுதியளித்திருந்தார்.

இருவரும் சேர்ந்து நிறையத் திட்டமிட்டோம். இணைந்து நிறைய கனவுகள் கண்டோம். ஆனால், அவரில்லாமல் இந்தப் படத்தை வெளியிடுவேன் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அவரது படத்தை விட, அவரையும், அவரது திறமையையும் கொண்டாட சிறந்த வழி இல்லை. இந்தப் படத்தை எடுக்கும்போது அவர் என் மீது எப்போதுமே அதிக அன்பைக் காட்டினார். படத்தை வெளியிடுகையில் அவரது அன்பே எங்களை வழிநடத்தும்.

இந்தப் படத்தை அனைவரும் இலவசமாகப் பார்க்குமாறு தயாரிப்பாளர் செய்துள்ளது மகிழ்ச்சியைத் தருகிறது. நாங்கள் அனைவரும் உன்னை நேசித்துக் கொண்டாடப் போகிறோம் என் நண்பா. உனது அழகான புன்னகையுடன், மேலே இருந்து எங்களை நீ ஆசிர்வதிப்பதை என்னால் காட்சியாகப் பார்க்க முடிகிறது. லவ் யூ".

இவ்வாறு இயக்குநர் முகேஷ் சாப்ரா தெரிவித்துள்ளார்.

சஞ்சனா சங்கி நாயகியாக நடித்துள்ள இந்தத் திரைப்படம் 'தி ஃபால்ட் இன் அவர் ஸ்டார்ஸ்' என்ற பிரபல ஆங்கில நாவலைத் தழுவி எடுக்கப்படுகிறது. ஏற்கெனவே இந்தக் கதை ஹாலிவுட்டில் திரைப்படமாக வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியில், சைஃப் அலி கான் கவுரவத் தோற்றத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in