சுஷாந்த்தின் மரணம் தற்கொலையே: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்

சுஷாந்த்தின் மரணம் தற்கொலையே: பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல்
Updated on
1 min read

சுஷாந்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் ஜூன் 14-ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். 'கை போ சே', 'ஷுத்தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனியாக சுஷாந்த் நடித்தார். இந்தப் படத்தின் மூலம் உலக அளவில் அவர் பிரபலமானார். இந்நிலையில் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

சுஷாந்த் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் நிலவும் வாரிசு அரசியல் குறித்துப் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் இயங்கி வரும் வாரிசு நடிகர்களின் பக்கங்களுக்கே நேரடியாகச் சென்று அவர்களைச் சாட ஆரம்பித்துள்ளனர். ஆலியா பட், சோனம் கபூர், சல்மான் கான், கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரையும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர்.

சுஷாந்த் மரணம் குறித்து அவரது தோழி ரியா, சுஷாந்தின் குடும்ப உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் சுஷாந்தின் உடலில் எந்தவித வெளிப்புறக் காயங்களோ, வன்முறை அடையாளங்களோ காணப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவரது நகங்களிலும் எந்தத் தடயங்களும் இல்லை என்றும் தூக்குப் போட்டதினால் ஏற்பட்ட மூச்சுத்திணறால் மரணம் ஏற்பட்டுள்ளது. எனவே, இது தெளிவான தற்கொலையே அன்றி வேறல்ல என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஐந்து மருத்துவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in