

மறைந்த இசையமைப்பாளர் வாஜித் கானுக்கு அவரது அண்ணி சிறுநீரக தானம் செய்திருந்தது தற்போது தெரியவந்துள்ளது.
பாலிவுட்டின் பிரபல இசையமைப்பாளர்கள் சாஜித்-வாஜித். பிரபல தபேலா கலைஞரான உஸ்தாத் ஷராஃபத் அலிகானின் மகன்களான இவர்கள் ‘தபாங்’ , ‘ஏக் தா டைகர்’, ‘வான்டட்’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
1998-ம் ஆண்டு சல்மான்கான் நடித்த ‘பியார் கியா தோ தர்ணா க்யா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளர்களாக அறிமுகமான சாஜித்- வாஜித் சகோதரர்கள் அதன்பிறகு சல்மான்கானின் ஆஸ்தான இசையமைப்பாளர்களாக விளங்கினர். சமீபத்தில் வெளியான ‘ப்யார் கரோனா’ ‘பாய் பாய்’ ஆகிய சல்மான்கானின் இரு ஆல்பங்களுக்கு இசையமைத்திருந்தனர்.
சாஜித்- வாஜித் சகோதரர்களில் ஒருவரான வாஜித் கான் ஜூன் 1 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்ட வந்த வாஜித்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. அந்த சிறுநீரகத்தைத் தானமாகத் தந்தவர் சாஜித்தின் மனைவியும், வாஜித்தின் அண்ணியுமான லுப்னா என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த விஷயத்தை கதாசிரியரும், இயக்குநருமான ரூமி ஜாஃப்ரீ கூறியுள்ளார். இவர் சாஜித் - வாஜித் சகோதரர்களின் குடும்ப நண்பர்.
"அந்த கால திரைப்படங்களில் தான் இது போன்ற விஷயங்களைப் பார்க்க முடியும். நிஜ வாழ்க்கையில் யார் இப்படியான தியாகங்களைச் செய்வார்கள்? வாஜித்தின் அண்ணி, அவருக்கு அம்மாவைப் போலத்தான் இருந்தார். தான் தானம் அளிக்கிறேன் என்பது வாஜித்துக்கு தெரியக் கூடாது என்று ரகசியமாகவே அவர் இதைச் செய்துள்ளார்" என்று ரூமி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
2008-ம் ஆண்டு ரூமி இயக்கிய 'காட் டுஸீ க்ரேட் ஹோ' திரைப்படத்துக்கு சாஜித் - வாஜித் இருவரும் இசையமைத்திருந்தது நினைவுகூரத்தக்கது.