

இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாகவும் ஒருதரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்த சூழலில் சல்மான்கான் நடிப்பில் வெளியான ‘தபாங்’ இயக்கிய அபினவ் காஷ்யப் தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்தது சல்மான் கான் தரப்புதான் என்று குற்றம் சாட்டி அபினவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.
மேலும் சல்மான்கான், ஆலியா பட், சோனம் கபூர் உள்ளிட்ட வாரிசு நடிகர்களை பலரையும் சாடி பல்வேறு பதிவுகளும், காணொலிகளும் மற்றும் மீம்ஸ்களும் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று (19.06.20) பீகார் மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஜன் அதிகார் கட்சியின் மாணவர் கூட்டமைப்பு சார்பில் பாட்னாவின் கார்கில் சௌக் பகுதியில் பாலிவுட்டின் வாரிசு அரசியலுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதில் மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கரண் ஜோஹர், சல்மான் கான் ஆகியோரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர்.
இது குறித்து ஜன் அதிகார் மாணவர் கூட்டமைப்பின் தலைவர் விஷால் குமார் கூறியிருப்பதாவது:
சுஷாந்தின் தற்கொலைக்குப் பின்னால் பாலிவுட்டின் பெரிய தலைகள் இருக்கின்றன. சுஷாந்த் ஒரு பிரபலத்தின் மகன் இல்லை என்பதால் தான் அவர் ஒடுக்கப்பட்டிருக்கிறார். சுஷாந்தை துன்புறுத்திவர்களுக்கு வழக்கு பதிவு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.