

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தைத் தொடர்ந்து பாலிவுட்டின் வாரிசு அரசியலைச் சாடியிருந்த நடிகை கங்கணா ரணாவத், தற்போது தான் அனுபவித்த போராட்டங்கள் குறித்துப் பகிர்ந்துள்ளார்.
கடந்த ஜூன் 14 ஆம் தேதி, நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தேசிய அளவில் அவரைத் தெரிந்த அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.
தொடர்ந்து நடிகை கங்கணா ரணாவத் காணொலி ஒன்றைப் பகிர்ந்தார். அதில் அவர் பாலிவுட்டை கடுமையாகச் சாடிப் பேசியிருந்தார். சுஷாந்தின் படங்களுக்கும், அவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைத்ததில்லை என்று பாலிவுட்டைக் குற்றம் சாட்டியிருந்தார்.
தற்போது வெளியிட்டுள்ள புதிய காணொலியில் கங்கணா ரணாவத் பேசியிருப்பதாவது:
"ஒருமுறை ஜாவேத் அக்தர் என்னை அவர் வீட்டுக்கு அழைத்தார். என்னிடம், 'ராகேஷ் ரோஷனும் அவரது குடும்பத்தினரும் துறையில் அதிக செல்வாக்கு உடையவர்கள். அவர்களிடம் நீ மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் உனக்கு யாரும் தயவுகாட்ட மாட்டார்கள். உன்னைச் சிறையில் அடைப்பார்கள். தொடர்ந்து நீ அழிவுப் பாதைக்குப் போவாய். தற்கொலை செய்து கொள்வாய்' என்றார். இவைதான் அவரது வார்த்தைகள்.
ஹ்ரித்திக் ரோஷனிடம் மன்னிப்புக் கேட்கவில்லை என்றால் நான் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று அவர் நினைத்தார் எனத் தெரியவில்லை. என்னிடம் சத்தம் போட்டார். திட்டினார். நான் அவரது இல்லத்தில் நடுங்கி நின்றேன்.
இதேபோல சுஷாந்தையும் இவர்கள் அழைத்துப் பேசியுள்ளார்களா? அவரது மனதில் இப்படியான எண்ணங்களை விதைத்தார்களா? எனக்குத் தெரியாது. ஆனால், சுஷாந்தும் அதே மாதிரியான சூழலில் இருந்தார். அவரது பேட்டிகளில், 'வாரிசு அரசியலும், திறமையும் ஒன்றாக இருக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் சரியான திறமையை வளரவிட மாட்டார்கள்' என்று பேசியிருந்தார். என்னால் அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதனால்தான் நான் கேள்விகளை எழுப்புகிறேன். இந்தச் சூழலில் காரணகர்த்தாவாக இருந்தது யார் என்று எனக்குத் தெரிய வேண்டும்.
சுஷாந்துக்கு ஆதித்யா சோப்ராவுடன் மோதல் ஏற்பட்டது. நான் 'சுல்தான்' படத்தை மறுத்தபோது என்னுடன் இனி பணியாற்றவே மாட்டேன் என அவர் என்னை அச்சுறுத்தினார். இந்தத் துறை எனக்கெதிராக அணி திரண்டது. பல சமயங்களில் நான் தனிமையையும், எனக்கு என்ன ஆகுமோ என்றும் அச்சப்பட்டிருக்கிறேன்.
ஒரு நபர் என்னை மணக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், அவர் என்னை விட்டு விலகி ஓடுவதை இவர்கள் உறுதி செய்தனர். எனது தொழில் வாழ்க்கை ஸ்திரமில்லாத நிலையில் என் காதல் வாழ்க்கை நாசமானது. எனக்கு எதிராக 6 வழக்குகள் இருந்தன. என்னைச் சிறையில் அடைத்துவிடுவார்கள் என்ற நிலை உருவானது.
ஆனால் நான் வித்தியாசமானவள். நான் உணர்ச்சிகளைக் கொட்டிவிடுவேன். ஆனால், சுஷாந்த் அப்படியல்ல. அவர் எல்லாவற்றையும் தனக்குள் வைத்துக் கொண்டார். அவரைப் பற்றி உருவாக்கப்பட்ட ராட்சசன் என்கிற பிம்பத்துக்கு ஊடகத்தினருக்கும் குறிப்பிட்ட பங்குள்ளது. அவர் மிகவும் மென்மையான, உணர்ச்சிகரமானவர் என்பது அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவருக்குமே தெரியும். ஒரு கட்டத்தில் அவர் அப்படி இருந்து சோர்ந்துவிட்டார் என நினைக்கிறேன். அவர் நிலை எனக்குப் புரிகிறது. ஏனென்றால் என்னையும் மோசமானவள், பின்தொடர்பவள் என்று சித்தரித்துள்ளனர்.
சுஷாந்தால் உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடியவில்லை என்று நினைக்கிறேன். அவர் குறைந்த திறமையுள்ளவர், 'கல்லி பாய்' படத்தை விட அவரது படம் அதிக வசூல் செய்திருக்க வேண்டும் என்றெல்லாம் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவரை வம்பிழுத்துக் கொண்டே இருந்தார்கள். 'எம்.எஸ்.தோனி' திரைப்படத்துக்குப் பின் அனைவருக்கும் சுஷாந்தைத் தெரியவந்தது. ஆனால் சல்மான் கான் போன்றவர்கள் யார் அது சுஷாந்த் சிங் ராஜ்புத்? என்று கேட்டார். இதையெல்லாம் நாம் நிறுத்த வேண்டும்".
இவ்வாறு கங்கணா ரணாவத் பேசியுள்ளார்.