

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை ஜெயா பட்டாச்சார்யா, தான் காலமானதாக வந்த போலியான செய்திகள் பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரு சில திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கடந்த சில மாதங்களில் காலமாகியுள்ளனர். அப்படி, இந்தி சின்னத்திரையின் பிரபல நடிகையான ஜெயா பட்டாச்சார்யா, கோவிட்-19 தொற்று பாதித்துக் காலமானதாகச் சிலர் பகிர ஆரம்பித்தனர்.
அப்படிப் பகிரப்பட்ட ஒரு ஃபேஸ்புக் பதிவின் ஸ்க்ரீன்ஷாட்டை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் ஜெயா பட்டச்சார்யா, ஹா ஹா ஹா என அதனுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் ஆரோக்கியமாக, உயிருடன் இருப்பதாகவும், தயவுசெய்து இப்படி ஒரு பதிவு போடுவதற்கு முன் உறுதி செய்து கொள்ளுங்கள் என்றும் கோரியுள்ளார்.
ஃபேஸ்புக் பதிவைப் பகிர்ந்த அந்தப் பயனர் தனது தவறை உணர்ந்து மன்னிப்பும் கேட்டுள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ள ஜெயா, "தமால் சக்ரபர்த்தி, எழுதி அனுப்பியதற்கு நன்றி. நீங்கள் உறுதி செய்திருக்கலாம் என்றே விரும்பினேன். உங்கள் பதிவு பலரை அழ வைத்துள்ளது. அது நியாயமல்ல. தெளிவுபடுத்த வேண்டியிருந்ததால் எனது நேரமும், மற்றவர்கள் நேரமும் வீணானது. அது நியாயமல்ல. ஆனால், நாங்கள் அனைவரும் நன்றாகச் சிரித்தோம். எனவே உங்கள் மன்னிப்பு ஏற்கப்பட்டுவிட்டது. நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.