

நெட்டிசன்கள் தொடர்ச்சியாக பின்னூட்டங்களில் திட்டிக்கொண்டே இருந்ததால், அவற்றை சோனம் கபூர் முடக்கியுள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் அவரது குடும்பத்துக்கு அடுத்தபடியாக வாரிசு நடிகர்கள் பலரைப் பாதித்துள்ளது. ஒரு பக்கம் பல வாரிசு நடிகர்களும் தங்கள் துயரத்தை வெளிப்படுத்தி, இரங்கல் தெரிவித்திருந்தாலும் இன்னொரு பக்கம் வாரிசு அரசியலால் ஒதுக்கப்பட்டதால்தான் மன அழுத்தத்தில் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சோனம் கபூர், ஆலியா பட், அனன்யா பாண்டே, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரை இணையத்தில் ரசிகர்கள் கடுமையாகச் சாடி வருகின்றனர். வழக்கம் போல தரக்குறைவான, ஆபாசமான வசவுகளையும் சிலர் தொடுத்து வருவதும் நடக்கிறது.
இந்நிலையில் நடிகை சோனம் கபூர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் பின்னூட்டம் இடும் வசதியை முடக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள சோனம், "மக்களே, வழக்கமாக என் மீது காட்டும் வெறுப்பு, எதிர்மறைக் கருத்துகளை நான் ஏற்றுக் கொள்வேன். ஏனென்றால் தங்கள் மனதில் அதிக வெறுப்பை வைத்திருப்பவர்களைப் பார்க்கும்போது எனக்குப் பாவமாக இருக்கும். ஏனென்றால் அது மற்றவர்களை விட அவர்களைத்தான் அதிகமாகப் பாதிக்கும். ஆனால் (என் பக்கத்தில் பதிவிடப்படும் வெறுப்புக் கருத்துகள்) என் குடும்பத்தையும், நண்பர்களையும் பாதிக்கிறது.
அவர்களெல்லாம் காசுக்கா இதைச் செய்கிறார்கள். பழமைவாத வலது சாரி சித்தாந்தத்தை நிறுவவே இதைச் செய்கிறார்கள் என்று எனக்குப் புரிகிறது. ஆனால் இது, எல்லையில் உயிரிழந்தவர்கள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிப் பேசுவதற்கான நேரம். எனவே நான் பின்னூட்டங்களை முடக்குகிறேன்" என்று பகிர்ந்துள்ளார்.
முன்னதாக சுஷாந்தின் மரணத்துக்கு அவரது முன்னாள் காதலிகளைக் குற்றம் சாட்டிய பதிவுகள் குறித்து சோனம் கபூர் விமர்சித்திருந்தார். "ஒருவரின் மரணத்துக்கு முன்னாள் காதலியை, இந்நாள் காதலியை, குடும்பத்தை, அவருடன் பணியாற்றுபவர்களைப் பழி சொல்வது அறியாமை மற்றும் வக்கிரமானதும் கூட" என்று சோனம் பதிவிட்டிருந்தார்.