

சகோதரர் அபினவ் பதிவால் உருவாகியுள்ள சர்ச்சைக்கு இயக்குநர் அனுராக் காஷ்யப் விளக்கமளித்துள்ளார்.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல், அதிகார துஷ்பிரயோகம், பின்புலம் இல்லாமல் துறைக்குள் வருபவர்களை வாரிசுகள் நடத்தும் விதம் என பல்வேறு பிரச்சினைகள் குறித்து பல பிரபலங்கள் பேசி வருகின்றனர்.
2010-ம் ஆண்டு சல்மான் கான் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் 'தபாங்'. இந்தப் படத்தை அபினவ் சிங் காஷ்யப் இயக்கியிருந்தார். இவர் இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரான அனுராக் காஷ்யப்பின் சகோதரர் ஆவார். 'தபாங்' முதல் பாகம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழில் 'ஒஸ்தி' என்றும், தெலுங்கில் 'கப்பார் சிங்' என்றும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.
முதல் பாகம் வெற்றி பெற்றாலும் இரண்டாம் பாகத்தை அபினவ் சிங் இயக்கவில்லை. 3 ஆண்டுகள் கழித்து 'பேஷாராம்' என்ற படத்தை அபினவ் இயக்கினார். அதன் பின் இன்றுவரை அவர் எந்தப் படமும் இயக்கவில்லை. தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்தது சல்மான் கான் தரப்புதான் என்று குற்றம் சாட்டி அபினவ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சல்மான் கான் குடும்பத்தினர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
அபினவின் பதிவு பாலிவுட்டில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக பலரும் அனுராக் காஷ்யப்பில் கருத்தைக் கேட்டு வந்தனர். தற்போது சகோதரர் கருத்து தொடர்பாக அனுராக் காஷ்யப் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"என்னை அழைக்கும் ஊடகத்தினரும், என்னைக் கேட்க நினைப்பவர்களும், இதையே என் அறிக்கையாக எடுத்துக் கொள்ளுங்கள்.
இரண்டு வருடங்களுக்கு முன்பு, அபினவ் அவர் விஷயங்களில் என்னைத் தலையிட வேண்டாம் என்று தெளிவாகச் சொன்னார். எனவே அவர் சொல்வது, செய்வது குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை. நன்றி"
இவ்வாறு அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார்.