

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை தொடர்பாக பாலிவுட்டின் உச்ச நட்சத்திரம் சல்மான் கான், தயாரிப்பாளர்கள் கரண் ஜோஹர், ஏக்தா கபூர், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலையைத் தொடர்ந்து பாலிவுட்டில் மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. துறைக்குள் இருக்கும் வாரிசு அரசியல் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் கரண் ஜோஹரும் அவரது நிறுவனமும் சுஷாந்தின் வாய்ப்புகளை முடக்கியதாகவும் ஒருதரப்பு குற்றம் சாட்டி வருகிறது.
இந்நிலையில் சுஷாந்தின் தற்கொலை தொடர்பாக பிஹாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர், கரண் ஜோஹர், சல்மான் கான், ஏக்தா கபூர், சஞ்சய் லீலா பன்சாலி உள்ளிட்டோர் மீது ஐபிசி 306, 109, 504 மற்றும் 506 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள ஓஜா, "7 படங்களிலிருந்து சுஷாந்த் நீக்கப்பட்டார் என்பதை எனது புகாரில் தெரிவித்துள்ளேன். அதுபோன்ற சூழல் உருவாக்கப்பட்டதுதான் அவர் தற்கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமும், சுஷாந்த் 7 படங்களிலிருந்து நீக்கப்பட்டார் என்றும், திரைத்துறையின் இரக்கமற்ற தன்மைதான் ஒரு திறமைசாலியின் உயிரை வாங்கிவிட்டது என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.