

பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா மற்றும் அமேசான் ப்ரைம் வீடியோ தளம் என இரண்டு தரப்புக்கும், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
'பாதாள் லோக்' என்ற வெப் சீரிஸ், அனுஷ்கா சர்மா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் ஸ்ட்ரீமிங் சேவையில் வெளியானது. ஒரு பக்கம் பெரும் பாராட்டைப் பெற்றாலும், இன்னொரு பக்கம் இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அரசியல் ரீதியான சில விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
அப்படி சீக்கிய சமூகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளதாக குர்தீபிந்தர் சிங் தில்லான் என்கிற வழக்கறிஞர் தயாரிப்பாளர் அனுஷ்கா சர்மா மீதும், அதை வெளியிட்ட அமேசான் ப்ரைம் தளம் மீதும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'பாதாள் லோக்' தொடரில், வன்முறையின் வரலாறு என்று சொல்லப்படும் மூன்றாவது பகுதியின் கதை பஞ்சாபில் ஒரு கிராமத்தில் நடப்பது போல காட்டப்படுவதாகவும், இன ரீதியான, சாதி ரீதியான மோதல்களை உருவாக்க வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இரண்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களை தவறாகச் சித்தரித்துள்ளதாகவும் இந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிபதி அருண் குமார் தியாகி தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.