

சுஷாந்த் சிங் ராஜ்புத், தனது கனவுகள் என்று கைப்பட எழுதிய குறிப்புகள் தற்போது கிடைத்துள்ளன. அவை சமூக வலைதளங்களில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தேசிய அளவில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைப் பற்றிய பல்வேறு நினைவுகளை இரங்கல் செய்திகளாக பாலிவுட்டின் பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.
சுஷாந்த் கைப்பட எழுதிய அவரது 50 கனவுகள் பற்றிய குறிப்பும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. இதை செப்டம்பர் 2019-ல் சுஷாந்த் சமூக வலைதளங்களில் பகிர்ந்திருந்தார்.
பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்றுத் தருவது, விமானம் ஓட்டக் கற்றுக் கொள்வது, இடது கை ஆட்டக்காரராக கிரிக்கெட் விளையாடுவது, ஐரோப்பா முழுவதும் ட்ரெய்னில் சுற்றுவது, இஸ்ரோ/நாசாவுக்கு 100 குழந்தைகளைப் பயிற்சி பெற அனுப்புவது, குறைந்தது 10 வகையான நடனங்களைக் கற்பது, லம்போர்கினி கார் வாங்குவது என இந்தப் பட்டியல் போகிறது.
அவரது கையெழுத்தைப் புகழ்ந்த ஒரு ரசிகர், ''இதெல்லாம் யதார்த்தத்தில் சாத்தியப்படும் விஷயங்களே. அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார். நான் மனமுடைந்து விட்டேன். என்றுமே நமக்கு இதற்கான காரணம் தெரியவராது. எனக்கு திவ்யபாரதி நினைவுக்கு வருகிறார்'' என்று பகிர்ந்திருந்தார்.
இன்னொருவர், ''அவர் நேர்மறை எண்ணம் கொண்ட ஆத்மா'' என்று போற்றியிருந்தார். ''இவ்வளவு செய்ய நினைத்தவர் தற்கொலை செய்துகொள்ள முடியாது. இதில் ஏதோ சரியில்லை என்று நினைக்கிறேன். காவல்துறை சரியான விசாரணை நடத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர் இந்த முடிவை எடுக்கும் அளவு முட்டாள் அல்ல'' என்றும் ஒரு ரசிகர் பகிர்ந்திருந்தார்.