சுஷாந்த் சிங்கை பாலிவுட் அங்கீகரிக்கவில்லை: கங்கணா ரணாவத் சாடல்

சுஷாந்த் சிங்கை பாலிவுட் அங்கீகரிக்கவில்லை: கங்கணா ரணாவத் சாடல்
Updated on
1 min read

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மனநல ரீதியில் பலவீனமானவர் அல்ல என்று கூறியுள்ள நடிகை கங்கணா ரணாவத், அவரது தகுதிவாய்ந்த படங்களும், நடிப்பும் எந்த விருதுகளாலும் அங்கீகரிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை காலை நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது தேசிய அளவில் அவரைத் தெரிந்த அனைத்துத் தரப்பிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது.

தற்போது நடிகை கங்கணா ரணாவத் காணொலி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இதில் அவர் பாலிவுட்டை கடுமையாகச் சாடிப் பேசியுள்ளார்.

"சுஷாந்த் தேசிய அளவில் தகுதி பெற்றவர். ஸ்டான்ஃபோர்டில் உதவித்தொகை பெற்றவர். அவர் மனம் எப்படிப் பலவீனமாக இருக்கும்? அவரது கடைசி சில பதிவுகளைப் பார்த்தீர்கள் என்றால் ஒரு விஷயம் தெளிவாகத் தெரியும். அவர், 'எனது படங்களைப் பாருங்கள், எனக்கு காட்ஃபாதர் கிடையாது, நான் துறையிலிருந்து வெளியேற்றப்படுவேன்' என்று அப்பட்டமாகக் கெஞ்சியுள்ளார். அவரது பேட்டிகளில் துறை ஏன் அவரை ஏற்கவில்லை என்பது குறித்துப் பேசியிருந்தார். எனவே, இந்த (தற்கொலை) சம்பவத்துக்கு அடிப்படை இல்லையா?

அவரது படங்களுக்கு அவருக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை. 'கேதர்நாத்', 'சிச்சோரே', 'எம்.எஸ்.தோனி: தி அண்ட்லோட் ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. 'கல்லி பாய்' போன்ற படங்களுக்கு அனைத்து விருதுகளும் கிடைத்துள்ளன.

எனக்கு வரும் சில செய்திகளில், சிலர், என்னைத் தவறான முடிவு எடுத்துவிடாதீர்கள் என்பார்கள். நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை ஏன் என் மனதில் விதைக்கிறார்கள். சுஷாந்தைப் பொறுத்தவரை அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் மதிப்பற்றவர் என்று அழைக்கப்பட்டிருக்கிறார்" என்று கங்கணா பேசியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in