

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் நேற்று (14.06.20) தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. இந்நிலையில் சுஷாந்த் சிங் திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்தியத் திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து நடிகை தீபிகா படுகோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ''மனநலப் பிரச்சினையுடன் அனுபவப்பட்ட ஒரு பெண்ணாக, தொடர்பு கொள்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி என்னால் இதற்கு மேல் வலியுறுத்த முடியாது. பேசுங்கள், தொடர்பு கொள்ளுங்கள், உணர்வுகளை வெளிப்படுத்துங்கள், உதவி கேளுங்கள். நினைவிருக்கட்டும், நீங்கள் தனி நபர் அல்ல. நாம் இதில் ஒன்றுபட்டே இருக்கிறோம். மிகவும் முக்கியமாக, ஏதோ ஒரு வழி பிறக்கும்'' என்று தீபிகா கூறியுள்ளார்.
சுஷாந்த் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான ‘ராப்தா’ என்ற திரைப்படத்தில் தீபிகா ஒரு பாடலில் மட்டும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.