

சுஷாந்த் சிங் மறைவு மிகவும் சோகத்தை தருகிறது என்று இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்தி திரையுலகின் முன்னணி நடிகரான ஷாரூக் கான் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் கூறியிருப்பாதாவது:
"அவர் என்னை மிகவும் நேசித்தார். நான் அவரை மிகவும் மிஸ் செய்வேன். அவரது சக்தி, உற்சாகம், அவரது முழுமையான மகிழ்ச்சிமிக்க புன்னகை. அவரது ஆன்மாவை இறைவன் ஆசிர்வதிக்கட்டும். அவரது குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். இது மிகவும் சோகத்தைத் தருகிறது. மிகவும் அதிர்ச்சியாக உள்ளது"
இவ்வாறு ஷாரூக் கான் தெரிவித்துள்ளார்.