

சுஷாந்த் சிங் மறைவு குறித்து இந்தி திரையுலகினரை கடுமையாகச் சாடியுள்ளார் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து இந்தி திரையுலகினரை கடுமையாக சாடியுள்ளார் ஸ்டைலிஸ்ட் சப்னா பாவ்னானி. இவர் சுஷாந்த் சிங் தோழி ஆவார். இவர் தான் சுஷாந்த் சிங்கின் போட்டோ ஷூட்களுக்கும், அவருக்கும் தனிப்பட்ட ஸ்டைலிஸ்ட்டாக இருந்தார்.
சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து சப்னா பாவ்னானி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"கடந்த சில வருடங்களில் சுஷாந்த் அனுபவித்த கஷ்டங்களில் எந்த ரகசியமும் இல்லை. சினிமாவில் இருக்கும் யாரும் அவருக்கு உறுதுணையாக நிற்கவும் இல்லை, அவருக்கு உதவ கைகொடுக்கவும் இல்லை. உண்மையில் சினிமாத்துறை எவ்வளவு மேம்போக்காக இருக்கிறது என்பதற்கு இன்று வரும் ட்வீட்களே சாட்சி. இங்கே யாரும் உங்களுக்கு நண்பன் இல்லை. ஆன்மா சாந்தி அடையட்டும்"
இவ்வாறு சப்னா பாவ்னானி தெரிவித்துள்ளார்.
-