

உன்னுடன் தொடர்பில் இல்லாதது என் குற்றம் தான் என்றும், இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் சுஷாந்த் சிங் மறைவு குறித்து கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. 'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'எம்.எஸ்.தோனி தி அண்ட்லோட் ஸ்டோரி' (MS Dhoni: The Untold Story) திரைப்படம் இவரை மொழிகள் தாண்டி பிரபலமாக்கியது. திடீரென்று தற்கொலை செய்து கொண்டது பாலிவுட் திரையுலகினரைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர், இந்திய கிரிக்கெட் அணியினர் மற்றும் அரசியல் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சுஷாந்த் சிங் திடீர் மறைவு குறித்து இந்தி திரையுலகின் முன்னணி இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
"கடந்த ஒரு வருடமாக நான் உன்னுடன் தொடர்பில் இல்லாதது குறித்து என்னை நானே குற்றம் கூறிக் கொள்கிறேன். உனக்கு மனிதர்கள் தேவைப்பட்ட காலங்களில் அதை நான் உணர்ந்தேன். ஆனால் எப்படியோ அந்த உணர்வை பின் தொடரவில்லை. இனி வாழ்வில் அந்த தவற்றைத் திரும்பச் செய்யமாட்டேன். நான் மிகவும் உற்சாகமான, இரைச்சலான, அதே நேரத்தில் மிகவும் தனிமையான வாழ்வை வாழ்கிறோம்.
நம்மில் சிலர் இந்த அமைதியை எதிர்த்துப் போராடாமல் அதனுள் சென்று விடுகிறோம். நாம் உறவுகளை உருவாக்கத் தேவையில்லை, ஆனால் அதைத் தொடர்ந்து பாதுகாக்க வேண்டும். சுஷாந்தின் துரதிர்ஷ்டவசமான மறைவு என்னுடைய இரக்கத்தை மதிப்பீடு செய்யவும், என்னுடைய சமநிலைகளைப் பாதுகாக்கவும் எனக்கு ஒரு எச்சரிக்கை மணி. இது உங்கள் அனைவருக்கும் கேட்கும் என்று நம்புகிறேன். உன் வசீகரமான புன்னகையையும், அரவணைப்பையும் நான் மிஸ் செய்வேன்"
இவ்வாறு கரண் ஜோஹர் தெரிவித்துள்ளார்.