

மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கவுள்ள திரைப்படத்துக்காக கே.வி. விஜயேந்திர பிரசாத் உடன் ஆமிர்கான் பேச்சு வார்த்தை நடத்திவருகிறார்.
‘பாகுபலி 1 & 2’, ‘மகதீரா’ உள்ளிட்ட வெற்றிப்படங்களுக்கு கதை எழுதியவர் கே.வி. விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமௌலியின் தந்தையும் ஆவார். தன் மகனின் படங்கள் மட்டுமல்லாது பல்வேறு தெலுங்கு படங்களுக்கு கதை எழுதியுள்ளார். இந்தியில் இவர் எழுத்தில் உருவான ‘பஜ்ரங்கி பாய்ஜான்’, ‘மணிகர்னிகா’ ஆகிய படங்களும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் நடிகர் ஆமிர்கான் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு பாகுபலி பாணியின் ஒரு பிரம்மாணட திரைப்படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். இதற்கான கதை உருவாக்க பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்காக கே.வி. விஜயேந்திர பிரசாத் உடன் ஆமிர் கான் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இது குறித்து கே.வி. விஜயேந்திர பிரசாத் கூறும்போது, ‘மகாபாரதம்’ தொடர்பான பேச்சுவார்த்தை எனக்கும் ஆமிர்கானுக்கும் இடையே தொடங்கியுள்ளது. விரைவில் அதற்கான கதை உருவாக்க பணிகளில் நாங்கள் ஈடுபடுவோம். இதை பற்றி இப்போதே விரிவாக பேசுவது நன்றாக இருக்காது’ என்று கூறியுள்ளார்.
தற்போது ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஆர்ஆர்ஆர்’ மற்றும் விஜய் இயக்கும் ‘தலைவி’ ஆகிய படங்களுக்கு கே.வி. விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.