தாய்க்கு கரோனா தொற்று: டெல்லி முதல்வரிடம் உதவி கோரும் சின்னத்திரை நடிகை

தாய்க்கு கரோனா தொற்று: டெல்லி முதல்வரிடம் உதவி கோரும் சின்னத்திரை நடிகை
Updated on
1 min read

இந்தி சின்னத்திரை நடிகை தீபிகா சிங் தனது தாய்க்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், ஆனால் மருத்துவமனை அதற்கான பரிசோதனை முடிவுகளைத் தர மறுக்கிறது என்றும் புகார் தெரிவித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் உதவி கோரியுள்ளார்.

'தியா அவுர் பாதி ஹம்' என்ற தொடரின் மூலம் பிரபலமானவர் தீபிகா சிங். மும்பையில் தனது கணவர், மகனுடன் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தில் மொத்தம் 45 பேர். அனைவரும் ஒன்றாக டெல்லியில் வசித்து வருகின்றனர்.

சமீபத்தில் தீபிகாவின் தாய்க்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தப் பரிசோதனை டெல்லி லேடி ஹார்திங்கே மருத்துவக் கல்லூரியில் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கான முடிவுகளை அவர்கள் தர மறுப்பதாகவும், அதைப் புகைப்படம் எடுக்க மட்டுமே அனுமதித்ததாகவும், பரிசோதனை முடிவு இல்லையென்றால் தன் தாயை மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என்பதால் தயவுசெய்து தனக்கு உதவ வேண்டும் என்றும் கூறி டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் தங்களுடையது 45 பேர் கொண்ட பெரிய குடும்பம் என்பதால், தன் தாயை வீட்டில் தனிமைப்படுத்துவது ஆபத்து என்றும், தொற்று அனைவருக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியையும் தனது பதிவில் அவர் டேக் செய்துள்ளார்.

டெல்லி இணை ஆணையர் அபிஷேக் சிங், சனிக்கிழமை காலை அன்று தீபிகா சிங்கின் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக ட்வீட் செய்துள்ளார். ஆனால், "இன்னும் இல்லை. அவர் வீட்டில் இருக்கிறார். என் பாட்டியின் உடல்நிலையும் மோசமாக உள்ளது. அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பாட்டியை ஜீவன் நர்ஸிங் ஹோமில் சேர்த்துள்ளனர். என் தாயை கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். எனது பாட்டி மற்றும் அப்பாவுக்கு கோவிட்-19 தொற்று இருக்கிறதா எனப் பரிசோதனை செய்ய வேண்டும்" என்று தீபிகா கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in