

ஜான்வி கபூர் நடித்திருக்கும் 'குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஸ்ட்ரீமிங் தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது.
கரோனா அச்சுறுத்தலால் தேசிய ஊரடங்கு நிலவி வருகிறது. பல துறைகளோடு சேர்த்து திரைத்துறையும் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மார்ச் மாதம் கடைசி வாரத்திலிருந்து வெளியீட்டுக்காகத் திட்டமிடப்பட்டிருந்த திரைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல தயாரிப்பாளர்கள் பொருளாதார ரீதியாக நஷ்டத்தைச் சந்தித்துள்ளனர்.
எனவே இந்தச் சூழலைப் பயன்படுத்தி வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் சில படங்களை நேரடியாக தங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களில் வெளியிட நெட்ஃபிளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்கள் பேச்சுவார்த்தை நடத்தின.
இந்தப் பேச்சுவார்த்தையில் அமேசான் நிறுவனம் பல படங்களைக் கைப்பற்றியது. 'குலாபோ சிதாபோ', 'சகுந்தலா தேவி' உள்ளிட்ட படங்கள் அமேசான் ப்ரைமில் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்திய விமானப் படையில் விமானியாக இருந்த குன்ஜன் சக்ஸேனாவின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் 'குன்ஜன் சக்ஸேனா: தி கார்கில் கேர்ள்' திரைப்படம் நெட்ஃபிளிக்ஸில் நேரடியாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் குன்ஜன் சக்ஸேனா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்தப் படத்தை கரண் ஜோஹரின் தர்மா ப்ரொடக்ஷன்ஸும், ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன. முன்னதாக, ஏப்ரல் 24-ம் தேதி அன்று இந்தப் படத்தை அரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவித்துள்ள நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு, தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தைப் பற்றிய ஒரு காணொலியைப் பகிர்ந்து, விரைவில் படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் என்று பகிர்ந்துள்ளது.
சரண் சர்மா இயக்கியிருக்கும் இந்தப் படம், 1999-ம் ஆண்டு கார்கில் யுத்தத்தின்போது இந்திய ராணுவ வீரர்களைக் காப்பாற்றிய பெண் விமானி குஞ்சன் சக்ஸேனாவைப் பற்றியது. போரின்போது தீரமாகச் செயல்பட்டதற்காக ஷௌர்ய வீர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. படம் வெளியாகும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.