மாமா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருக்கும் நவாசுதின் சகோதரர் மகள்

மாமா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருக்கும் நவாசுதின் சகோதரர் மகள்
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக்கின் சகோதரர் மகள் தான் சிறுவயதில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்துள்ளார். தன் மாமா மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

"எனக்கு 9 வயதாக இருக்கும் போது என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்திய என் மாமா மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறேன். எனக்கு இரண்டு வயதாக இருக்கும் போது என் பெற்றோர் விவாகரத்து பெற்றனர். எனக்கு வளர்ப்புத் தாய் இருந்தார். நான் அதிகம் சித்திரவதை அனுபவித்திருக்கிறேன். என் மாமா என்ன செய்தார் என்பதை சிறு வயதில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நான் வளர்ந்த போது அவர் என்னைத் தொட்டது வேறுவிதமானது என்பதைப் புரிந்து கொண்டேன். வன்முறையையும் அனுபவித்திருக்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது பற்றி நவாசுதினிடம் பேசும்போது அவர் தனக்கு உதவவில்லை என்றும், அப்படி ஒரு விஷயமே நடந்திருக்காது என்று மறுத்ததாகவும் கூறியுள்ளார்.

டெல்லி ஜமியா காவல் நிலையத்தில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தியின் இணைப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள நவாசுதினின் முன்னாள் மனைவி ஆலியா, "இது வெறும் ஆரம்பம் தான். நிறைய ஆதரவு தரும் இறைவனுக்கு நன்றி. உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் நிறைய விஷயங்கள் இன்னும் இருக்கிறது. அமைதியாகத் துன்பப்பட்டவள் நான் மட்டுமல்ல. இன்னும் எவ்வளவு உண்மையை பணத்தால் வாங்க முடியும், யாருக்கெல்லாம் லஞ்சம் கொடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம்" என்று அதனுடன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் ஆலியா நவாசுதினிடம் விவாகரத்து, ஜீவனாம்சம் கோரி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். நவாசுதினின் குடும்பம் தன்னை உடல் ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் துன்புறுத்தியதாக ஆலியா குற்றம் சாட்டியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in