

நீங்கள் எங்கிருந்தாலும் அமைதியுடன் ஓய்வெடுக்கிறீர்கள் என்று வாஜித் கான் மறைவுக்கு ஸ்ரேயா கோஷல் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
பாடகர், இசையமைப்பாளர் வாஜித் கான் கரோனா தொற்று காரணமாக காலமானார். 42 வயதான வாஜித் கானுக்கு ஏற்கெனவே சிறுநீரகப் பிரச்சினைகள் இருந்தன. வாஜித் கானுக்கு கரோனா தொற்றும் இருந்துள்ளது. வாஜித் கானின் மறைவுக்கு பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வாஜித் கானின் மறைவு குறித்து முன்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"நான் இதை எழுதுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இது நிஜம் அல்ல என்பதைப் போல தோன்றுகிறது. வாஜித் பாய், நான் கண்ணை மூடினால் உங்களது சிரிக்கும் முகம் தான் தெரிகிறது. எந்த சூழலிலும் நேர்மறையாக இருந்தீர்கள், உங்களைச் சுற்றி இருந்தவர்களுக்கு நிறைய அன்பை, மகிழ்ச்சியை, வலிமையைத் தந்தீர்கள். நான் உங்களை முதலில் சந்தித்த போது திரைத்துறைக்குப் புதிது. ஆனால் என்னை குடும்பத்தில் ஒருத்தியைப் போல உணர வைத்தீர்கள்.
உங்கள் அடக்கம், இரக்கம், அர்ப்பணிப்பு, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் இடையறா அன்பு என அத்தனை விஷயங்களையும் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன். எல்லாவற்றையும் விட நீங்கள் அற்புதமான திறமை கொண்ட இசையமைப்பாளர், பாடகர். நீங்கள் எங்கிருந்தாலும் அமைதியுடன் ஓய்வெடுக்கிறீர்கள். அவரது குடும்பத்துக்கு இறைவன் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைத் தரட்டும். இந்த பிரியாவிடை மிகக் கடினமாக இருக்கிறது. ஆன்மா சாந்தியடையட்டும்"
இவ்வாறு ஸ்ரேயா கோஷல் தெரிவித்துள்ளார்.