மும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள்: சல்மான் கான் நன்கொடை

மும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்கள்: சல்மான் கான் நன்கொடை
Updated on
1 min read

கரோனா தொற்றுக்கு எதிரான களப்பணியில் இருக்கும் மும்பை காவல்துறைக்கு ஒரு லட்சம் சானிடைசர்களை நடிகர் சல்மான் கான் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

சல்மான் கானின் சொந்த ஃப்ரெஷ் நிறுவனத்தின் கீழ் இந்த சானிடைசர்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. மகாராஷ்டிர முதல்வரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சல்மான் கானுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நம் மும்பை காவல்துறைக்கு கிருமிக்கு எதிரான போருக்காக ஒரு லட்சம் சானிடைசர்களை வழங்கியதற்கு நன்றி சல்மான் கான்" என்று அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் இதற்கு நன்றி என்று பதிலளித்துள்ளார்.

யுவசேனா உறுப்பினர் ராகுல் கனால், "நமது களப் பணியாளர்களுக்காகத் தோள் கொடுக்கும் சல்மான் கானுக்கு நன்றி. அனைவருக்கும் அக்கறை காட்டும் மகாராஷ்டிர முதல்வர் தாக்கரே, மும்பை காவல்துறை அனைவருக்கும் நன்றி. ப்ரெஷ் சானிடைசர்கள், மும்பை காவல்துறையின் அனைத்துக் களப்பணியாளர்களுக்கும் விநியோகிக்கப்படுகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

கரோனா நெருக்கடிக் காலம் ஆரம்பித்ததிலிருந்தே நடிகர் சல்மான் கான் எண்ணற்ற உதவிகளைச் செய்து வருகிறார். ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திரைத்துறையின் தினக்கூலிப் பணியாளர்களுக்கு முதலில் நிதியுதவி செய்தது சல்மான் கான் தான். மேலும் தனது பண்ணை வீட்டுக்கு அருகேயுள்ள கிராமத்தினருக்கு இலவசமாக மளிகைப் பொருட்களை வழங்கினார். மேலும் 25,000 பேருக்கு உணவும் வழங்கியிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in