குர்ஆன் மேற்கோள் சர்ச்சை: ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கிய ஸாய்ரா வாசிம்

குர்ஆன் மேற்கோள் சர்ச்சை: ட்விட்டர், இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கிய ஸாய்ரா வாசிம்
Updated on
1 min read

இந்தியாவில் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து நடிகை ஸாய்ரா வாசிம் குர்ஆனை மேற்கோள் காட்டி பகிர்ந்த கருத்து கடும் விமர்சனத்தைச் சந்தித்ததால் அவர் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கியுள்ளார்.

"ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், ரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்" என்று ஸாய்ரா வாசிம் ட்வீட் செய்திருந்தார்.

தொடர்ந்து வெட்டுக்கிளி படையெடுப்பை நியாயப்படுத்தும் விதமாக அவர் பதிவிட்டதாகப் புரிந்துகொண்ட நெட்டிசன்கள், ஸாய்ராவை வசை பாட ஆரம்பித்தனர். எதிர்வினை அதிகமாகவே ஸாய்ரா தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நீக்கினார். ஆனால் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் தொடர்ந்து அவர் கருத்துக்கு நெட்டிசன்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அங்கு ஸாய்ரா இந்தப் பதிவைப் பகிர்ந்திருந்தார்.

ஒரு பயனர், "பெண்ணே, ஜம்மு காஷ்மீர், கேரளா மற்றும் இன்னும் பல இடங்களில் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை நீங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் வெட்டுக்கிளிகளால் பாதிக்கப்பட்ட அந்தப் பயிர்களை யார் சாப்பிட்டிருப்பார்கள் என்று யாருக்கும் தெரியாது. இதுபோன்ற இக்கட்டான காலகட்டத்தில் நேர்மறையாக, நீங்கள் கல்வியறிவு பெற்றவர் என்பதைப் பிரதிபலிக்கும் வண்ணம் எதையாவது பதிவிடுங்கள்" என்று கருத்து கூறியிருந்தார்.

இன்னொரு பயனர், "உங்களுக்கு மரியாதை கொடுத்தே இதைக் கேட்கிறேன், அப்படியென்றால் பாவப்பட்ட விவசாயிகளின் பயிர்களை அழிக்க ஒவ்வொரு வருடமும் இதே நேரத்தில் அல்லா இந்தியாவுக்கு வெட்டுக்கிளிகளை அனுப்பி வைக்கிறாரா? அந்த விவசாயிகள் எந்தத் தொழில்களின் எழுச்சியிலும் ஈடுபடவில்லை, இயற்கையை அழிக்க வாகனங்களைப் பயன்படுத்துவதில்லை, இயற்கையை அழிக்கும் பணக்காரர்களை விட்டுவிட்டுப் பாவப்பட்ட விவசாயிகளைப் பாதிக்க மட்டும் அல்லா வெட்டுக்கிளிகளை அனுப்புகிறாரா" என்று கேட்டிருக்கிறார்.

அதேநேரத்தில், ஒரு சிலர் ,ஸாய்ராவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "குர்ஆனை மேற்கோள் காட்டுவது குற்றமல்ல. ஏன் ஒவ்வொரு இந்தியரும் ஸாய்ரா வாசிமை வசைபாடுகிறீர்கள். அவர் எந்த குறிப்பிட்ட தேசத்தையும், மதத்தையும் குறிப்பிடவில்லை. அனைவரும் ஸாய்ரா வாசிமுக்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அவருக்கு நம் ஆதரவு தேவை" என்று ஒரு பயனர் பகிர்ந்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in