ஒரு சோதனை எலியைப் போல உணர்ந்தேன்: ரன்வீர் சிங்

ஒரு சோதனை எலியைப் போல உணர்ந்தேன்: ரன்வீர் சிங்
Updated on
1 min read

‘பத்மாவத்’, ‘கல்லிபாய்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு தான் ஒரு சோதனை எலியைப் போல இருந்ததாக ரன்வீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐஏஎன்எஸ் நிறுவனத்திடம் ரன்வீர் சிங் கூறியிருப்பதாவது:

''இந்த ஊரடங்கு காலகட்டத்தை இரண்டு வழிகளில் நான் அணுகி வருகிறேன். முதல் இரண்டு வாரங்கள் என்னவோ போல இருந்தது. பிறகு ஒரு மாதம், ஒன்றரை மாதம் என தற்போது இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன.

தினமும் காலையில் எழுந்து செய்திகளைப் படிப்பது ஒரு பயங்கரமான அனுபவம். இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதுமுள்ள நம் சகோதர சகோதரிகளுக்கு இந்தக் கொடிய வைரஸ் காலகட்டத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்வது மிகவும் கொடுமையானது.

உலகம் தற்போது இந்தக் கடினமான சூழலை எதிர்கொள்வது நம்முள் ஒரு பாரத்தைப் போல இருக்கிறது. இது நமக்குள் உணர்வுபூர்வமாகவும், மனதளவிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து என்னால் முடிந்தவரை நேர்மறையாக இருக்க முயற்சி செய்கிறேன். இந்த பயங்கரமான சூழலிலும் ஒரு வெளிச்சத்தைக் காண முயல்கிறேன்.

இந்த ஊரடங்குக்கு முன்னால் என் வாழ்க்கை மிகவும் பரபரப்பானதாக இருந்தது. அதிலும் குறிப்பாக ‘பத்மாவத்’, ‘கல்லிபாய்’, ‘சிம்பா’ உள்ளிட்ட படங்களுக்குப் பிறகு சக்கரத்தில் ஓடும் ஒரு சோதனை எலியைப் போல உணர்ந்தேன். ஒரு ரேடார் கருவிக்குள் இருப்பதைப் போல வாழ்ந்து கொண்டிருந்தேன்.

இந்த ஊரடங்கு எனக்கு ஒரு வரப்பிரசாதம். இது என்னுடைய நலனில் நான் அக்கறை கொள்வதற்கான நேரம்''.

இவ்வாறு ரன்வீர் சிங் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in