

தமிழ் ரீமேக்கைத் தொடர்ந்து, இந்தியிலும் ரீமேக்காகவுள்ளது 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம்.
பிப்ரவரி 7-ம் தேதி வெளியான மலையாளப் படம் 'அய்யப்பனும் கோஷியும்'. திரைக்கதை ஆசிரியர் சச்சியை இயக்குநராகவும் வெற்றி பெறச் செய்துள்ள இந்தப் படத்தில் பிஜுமேனன், ப்ரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இந்தப் படத்தின் ரீமேக் உரிமைக்கு கடும் போட்டி நிலவியது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை 'ஜிகர்தண்டா', 'ஆடுகளம்' படத்தின் தயாரிப்பாளரான பைவ் ஸ்டார் கதிரேசன் கைப்பற்றியுள்ளார். யாரை நடிக்கவைக்கலாம் என்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தற்போது இதன் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் கைப்பற்றியுள்ளார். இதனை தனது ட்விட்டர் பதிவில் அவர் உறுதிப்படுத்தியுள்ளார். தனது ஜே.ஏ என்டர்டையின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். யார் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பதை எல்லாம் ஜான் ஆபிரஹாம் உறுதிப்படுத்தவில்லை.