

‘ஃபேன்ட்ரி’, ‘சாய்ரத்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே இயக்கிவரும் படம் ‘ஜூன்ட்’. இதில் அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
குப்பத்து இளைஞர்களின் கால்பந்து பயிற்சியாளராக விளங்கிய விஜய் பார்ஸே என்பவரின் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீஸர் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இக்கதையில் முக்கியக் கதாபாத்திரமாக வருபவர் அகிலேஷ் பால். இவரது கதையைத் தவிர்த்து இப்படத்தை எடுப்பது கடினம். இந்நிலையில் அகிலேஷ் பாலின் கதையின் உரிமையை தான் ஏற்கெனவே வாங்கிவிட்டதாகக் கூறி நந்தி சின்னி குமார் என்பவர் ‘ஜூன்ட்’ தயாரிப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
''ரவுடியாக இருந்து கால்பந்து வீரராக மாறிய அகிலேஷ் பாலின் கதையை பிரத்யேகமாக நான் வாங்கியிருக்கிறேன். அவருக்குப் பயிற்சி அளித்தவர் விஜய் பார்ஸே. தற்போது விஜய் பார்ஸேவின் வாழ்க்கையை நாகராஜ் மஞ்சுளே படமாக்கி வருகிறார். விஜய் பார்ஸே தன் கதையின் காப்புரிமையை இப்படத்தின் தயாரிப்பாளர்களான டி சிரீஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளார். அகிலேஷ் பால் தன் கதையின் காப்புரிமையை நாகராஜ் மஞ்சுளேவிடம் விற்றுள்ளதாக நான் அனுப்பிய நோட்டீஸுக்குப் பதிலளித்துள்ளார். மேலும் தன் கதையை ஆவணப்படம் எடுப்பதற்காக மட்டுமே என்னிடம் விற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நாகராஜ் மஞ்சுளே மற்றும் தயாரிப்பாளர்கள் என்னிடம் தொலைபேசி வாயிலாக மட்டுமே கதை வாங்கப்பட்ட விஷயத்தைத் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக இதுவரை எதுவும் எனக்குத் தெரிவிக்கப்படவில்லை.
மேலும், இப்படத்தின் கதை தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் இருப்பதால் இப்படத்தை இப்போதைக்கு வெளியிடக்கூடாது'' என்று நந்தி சின்னி குமார் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு வரும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.