

மோசமான ஆண்மைத்தனத்தைக் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் 'அர்ஜுன் ரெட்டி'. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழ் மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. 'கபீர் சிங்' என்ற பெயரில் உருவான இந்தி ரீமேக்கை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்க ஷாகித் கபூர் நாயகனாக நடித்திருந்தார்.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், அதே வேளையில் சர்ச்சையும் விவாதத்தையும் உருவாக்கியது. 'கபீர் சிங்' படத்தின் நாயகன் கோபம் கொள்வது, குடிப்பது, புகை பிடிப்பது, மற்ற பெண்களிடம் மூர்க்கமாக நடப்பது, நாயகியைக் காதலிக்க வைப்பது உள்ளிட்ட அத்தனை விஷயங்களும் நாயகனுக்கான குணங்களைப் போலவே படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கும். இதுவே படத்துக்கு பெண்ணியவாதிகளிடையே எதிர்ப்புகள் எழ முக்கியக் காரணம்.
'கபீர் சிங்' வெளியானபோது கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார் டாப்ஸி. தற்போது கரோனா ஊரடங்கில் நேரலை பேட்டி ஒன்றில் " 'கபீர் சிங்' ஏன் உங்களுக்குப் பிடிக்கவில்லை, நீங்களே பல எதிர்மறை கதாபாத்திரங்கள் நடித்திருக்கிறீர்களே? பாலின வேறுபாடு இல்லாமல் தீயவர்கள் இருக்கலாமே?" என்ற கேள்விக்கு டாப்ஸி கூறியிருப்பதாவது:
"கண்டிப்பாக. ஆண் பெண் சமத்துவத்தை நான் முழுமையாக ஆதரிக்கிறேன். எனக்கு எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘பத்லா’ படத்தில் வில்லியாகவே நடித்திருக்கிறேன். அந்தக் குணத்தைக் கொண்டாடக் கூடாது என்றுதான் சொல்கிறேன்.
'பத்லா' படம் முடியும் போது நான் எல்லாவற்றையும் பெற்று, விடுதலை அடைந்து சந்தோஷமாக இருந்திருந்தால் அது தவறு. இதுதான் கபீர் சிங்குக்கும், நான் விரும்பி நடிக்கும் எதிர்மறைக் கதாபாத்திரத்துக்கும் இருக்கும் வித்தியாசம். (அந்த மாதிரியான தீய) குணத்தைக் கொண்டாடாதீர்கள்.
நான் என் எண்ணங்களை யார் மீதும் திணித்ததில்லை. எனக்குப் பிடிக்கவில்லையென்றால் நான் பார்க்க மாட்டேன் அவ்வளவே. நீங்கள் பாருங்கள். வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். மோசமான ஆண்மைத்தனத்தைக் கொண்டாடுவது எனக்குப் பிடிக்காது. அவ்வளவுதான்".
இவ்வாறு டாப்ஸி தெரிவித்துள்ளார்.