

மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் இர்ஃபான் கான் குறித்து அவதூறாகக் கருத்துப் பதிவிட்டதால் நடிகர் கமல் ஆர் கான் மீது மும்பை பாந்த்ரா புறநகர் பகுதி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யுவசேனா என்ற அமைப்பின் உறுப்பினர் ராகுல் கனால் அளித்த புகாரின் பெயரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 29-ம் தேதி நடிகர் இர்ஃபான் கானும், ஏப்ரல் 30-ம் தேதி நடிகர் ரிஷி கபூரும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார்கள். இர்ஃபான் கானுக்கு புற்று நோய் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவருக்குக் குடலில் தொற்று ஏற்பட்டு அதற்கான சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். ரிஷி கபூருக்கு இரத்தப் புற்றுநோய் இருந்தது. அதற்கு அவர் கடந்த சில வருடங்களாகவே சிகிச்சை மேற்கொண்டிருந்தார்.
ஏப்ரல் 30 அன்று ரிஷிகபூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபின், கமல் ஆர் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், ரிஷி கபூர் இறக்கக்கூடாது, ஏனென்றால் மதுபானக் கடைகள் விரைவில் திறக்கப்படவுள்ளது என்று கருத்துப் பதிவிட்டிருந்தார்.
ஏப்ரல் 29-ம் தேதி இர்ஃபான் காலமாவதற்கு முன், இர்ஃபான் நிறைய தயாரிப்பாளர்களை ஏமாற்றி விட்டார், பணம் வாங்கிக் கொண்டு நடிக்கவில்லை என்கிற ரீதியில் அவரைப் பற்றிய கருத்துகளை கமல் ஆர் கான் பகிர்ந்தார்.
"மறைந்த நடிகர்கள் குறித்து இழிவான கருத்துக்களைக் கூறியதற்காக நாங்கள் கமல் ஆர் கான் மீது 294 பிரிவின் கீழ் (பொதுவில் இழிவாகப் பேசுவது அல்லது நடந்துகொள்வது) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம்" என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
வழக்குப் பதியப்பட்டு 24 மணி நேரம் கடந்த பின்னும் இதுவரை எந்த விதமான கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.