

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. படப்பிடிப்புகள் நடக்காததால் சினிமாவில் பணியாற்றும் தினக்கூலிப் பணியாளர்கள் அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு பாலிவுட் நடிகர்களான சல்மான் கான், ஷாரூக் கான் உள்ளிட்ட பலரும் பொருளாதார உதவிகளைச் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கான ஊதியத்தை வழங்குமாறு தயாரிப்பாளர்களை நடிகை கிரித்தி சனோன் வலியுறுத்தியுள்ளார்.
வயது முதிர்ந்த தினக்கூலிப் பணியாளர் ஒருவர் தான் ஊதியமில்லாமல் தவிப்பது குறித்துப் பேசும் வீடியொ ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த கிரித்தி சனோன் கூறியுள்ளதாவது:
'' ‘ஹுமாரி பாஹு சில்க்’ என்ற தொடரில் பணியாற்றிய என் நண்பர் ஒருவரின் மூலம் இந்தச் சம்பவம் எனக்குத் தெரியவந்துள்ளது. ஆனால், இதைப் போல இன்னும் பலர் தங்களுக்குக் கிடைக்கவேண்டிய ஊதியத் தொகை இல்லாமல் கஷ்டப்படுவதை பார்க்கும்போது என் மனம் மிகவும் வலிக்கிறது. இந்தத் தருணத்தில்தான் அவர்கள் கஷ்டப்பட்டு வேலை செய்ததற்கான தொகை மிகவும் தேவைப்படும்.
அவர்கள் அனைவரது ஊதியத்தையும் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களிடம் நான் கோரிக்கை வைக்கிறேன். இதற்காகத்தான் அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். இது அவர்களுடைய பணம். தயவுசெய்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். ஒவ்வொரு துறையிலும் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் அவர்களது ஊதியத் தொகையைக் கொடுத்து விடுங்கள்''.
இவ்வாறு கிரித்தி சனோன் கூறியுள்ளார்.